அப்போது செங்கல் சூளையில் கொத்தடிமை கொடூரம்.. இப்போது.. சுயதொழிலில் சாதனை படைக்கும் பழங்குடி தம்பதி..
15 ஆண்டுகளுக்கு மேலாக செங்கல் சூளை கொத்தடிமைகளாக வாழ்ந்து விட்டோம்.
சுயதொழிலில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் மூன்று வருடங்களாக அகர்பத்தி தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர் இருளர் இனத்தை சேர்ந்த அய்யனார் பேபி ஷாலினி தம்பதியினர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கயத்தூர் பகுதியைச் சேர்ந்த இருளர் இன தம்பதியான அய்யனார் (33) - பேபி ஷாலினி(30). இருவரும் இணைந்து மூன்று வருடங்களாக அகர்பத்தி மற்றும் மூலிகை சாம்பிராணி போன்றவற்றை தயாரித்து வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இத்தம்பதியினர் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக கொத்தடிமைகளாக செங்கல் சூளையில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த நிலைமை மாறவேண்டும் என்று எண்ணிய அய்யனார், சுயதொழில் செய்து ஏதேனும் விழாவும் பார்க்கலாம் என எண்ணி உள்ளார். இதனைத் தொடர்ந்து, மேலும் இருளர் இன மக்களுக்கு மூலிகை குறித்து அறிவு இருப்பதாலும், சாம்பிராணி எப்போதும் மவுஸ் இருப்பதாலும் சாம்பிராணி தயாரிப்பில் களமிறங்கியுள்ளார். இதனால் அய்யனார் கொரோனா காலகட்டத்தில் செங்கல் சூளையில் வேலை இல்லாத நாட்களை பயன்படுத்தி யூடியூப் மூலம் அகர்பத்தி தயாரிக்கும் முறையை கற்றுள்ளார்.
இதனையடுத்து அகர்பத்தி தயாரிக்கும் முறையை முழுமையாக தெரிந்து கொண்ட பின்பு முதலீடாக ஐம்பதாயிரம் ரூபாயை வைத்து வீட்டிலேயே குடிசைத் தொழிலாக மூலிகை சாம்பிராணி மற்றும் அகர்பத்தி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முயற்சியில் இடப்பட்ட அய்யனார் தங்களுடைய இனத்தை சேர்ந்த மற்ற இருளர் இன மக்களை சேர்த்து ஒரு குழுவாக இணைந்து செயல்பட ஆரம்பித்தனர். மேலும் இவர்கள் தயாரிக்கும் அகர்பத்தி சாம்பராணி பொருட்களுக்கு "மயில் மாஸ்" என்ற பெயரை சூட்டி விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.
மேலும் இவர்கள் தயாரிக்கும் மூலிகை சாம்பிராணி,அகர்பத்திகளில் ஆறு வகை நறுமணங்கள் தயாரிக்கின்றனர். அதாவது அகர்பத்திகளில் ( சந்தனம், மல்லிகை, ரோஜா, லாவண்டர், பைனாப்பிள் என ஆறு வகையிலும் , சாம்பிராணியில் ரோஸ் ஜவ்வாது , லாவண்டர் தூபம், இயற்கை சாம்பிராணி , வெண்குங்கலிய தூபம், சந்தன தூபம் கொசுவர்த்தி மூட்டம் என ஆறு வகைகளிலும் சாம்பிராணி தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த சாம்பிராணியில் வெண்குங்கலிய மூலிகை தூபம் அதிக அளவில் விற்பனை ஆகிறது என அய்யனார் தெரிவித்தார்.
மேலும் இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, சேலம், சென்னை, மேல்மருத்தூர், கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு டீலர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது இந்த அகர்பத்தி தயாரிப்பில் இருளர் பகுதியைச் சேர்ந்த சுமார் பத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடுத்தி இந்த அகர்பத்தி தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார் அய்யனார்.
இதுதொடர்பாக அய்யனார் கூறுகையில்... இதுநாள் வரை நாங்கள் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக வாழ்ந்து இருந்தோம். அந்த நிலைமை மாற வேண்டும் என எண்ணி தற்போது சுயதொழில் செய்து , என்னைப் போன்ற என் இனத்தை மக்களையும் கவுரமாக சுய தொழில் செய்வதற்கு ஆயத்தப்படுத்தி வருகிறேன் . மேலும் அந்த முயற்சியில் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறேன் . தற்போது கைகளில் ஆரம்பித்த இந்த தொழில் மெஷின் கொண்டு தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் அளவிற்கு உயர்ந்து வந்துள்ளோம்.
மேலும் இந்த குடிசை தொழிலை நம்பியுள்ள மக்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். மேலும் இந்த குடிசை தொழிலில் பெரிய அளவில் செயல்படுத்த, கடனுதவி வாங்குவதற்கு வங்கிகளை அணுகி கேட்டால் அவர்கள் “நீங்கள் இருளர்கள் சரியாக பணம் செலுத்த மாட்டீர்கள்” என உதாசீனப்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு தரப்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கினாலும், அடிமட்டத்தில் இருக்கக்கூடிய எங்களுக்கு சரியான முறையில் வந்து சேருவது இல்லை. மேலும் இல்லை என மக்கள் முன்னேறுவதற்கு அரசாங்க தரப்பில் ஏதேனும் நிதி உதவி அல்லது கடன் உதவி வழங்கினால் இன்னும் இந்த தொழிலையும் எங்கள் இன மக்களும் முன்னேறுவார்கள் எனவும், இருளர் மக்கள் என்றால் கொத்தடிமைக்கள் என்கிற நிலைமையை நிச்சயமாக மாற்றிக் காட்டுவோம் எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார் அய்யனார்.