Village Cooking Channel | முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கொடுத்த Village Cooking யூடியூப் சேனல் : டைமண்ட் பட்டனும், வெள்ளந்தி அன்பும்..!
இந்த வயதில் இத்தனை பெருமை எனக்கு. நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும். அதுதான் வேணும். நீங்க நல்லா இருந்தா நாங்களும் நல்லா இருப்போம் என்கிறார் 75 வயதான வில்லேஜ் குக்கிங் சேனலின் படைத்தளபதி.
முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளது கிராமத்து சமையல் யூடியூப் சேனலான Village Cooking சேனல். இந்த யூடியூப் சேனல், ராகுல் காந்தியால் இன்னும் பிரபலமடைந்ததை மறக்க முடியாது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம், தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்திருந்த ராகுல் காந்தி, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 5 மாவடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனிடையே, அப்பகுதியில் Village Cooking எனப்படும் யூடியூப் சேனலின் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று, அந்தக் குழுவினருடன் கலந்துரையாடினார்.
அந்தக் குழுவினர், காளான் பிரியாணி சமைத்துக் கொடுக்க கொஞ்சும் தமிழில் ராகுல் காந்தி அவர்களுடன் உரையாடியதும், ஓலைப் பாயில் அமர்ந்து அவர்களுடன் உணவருந்தியதும் பலரையும் ஈர்த்தது. ராகுல் காந்தி, வில்லேஜ் குக்கிங் வீடியோ வைரலானது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட வில்லேஜ் குக்கிங் யூடியூப் 1 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதற்கான ஆங்கீகார ஷீல்டு, டைமன்ட் பட்டன், மற்றும் பரிசுகளை யூடியூப் சேனல் வில்லேஜ் குக்கிங் குழுவினருக்கு அனுப்பியுள்ளது. இந்த யூடியூப் சேனல் கடந்த 2018 ஏப்ரலில் தான் தொடங்கப்பட்டது. இந்தச் சேனலின் அசைவ உணவு சமையலுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இந்த ஆறுபேர் கொண்ட குழுவுக்கு இது எப்படி சாத்தியமானது என்ற ஆச்சர்யப்பட்டீர்கள் என்றால், உழைப்பும், விடாமுயற்சியும் மட்டுமே காரணம் என்பதுதான் பதில். இந்தக் குழுவில் 5 இளைஞர்கள் உள்ளனர். படைத் தளபதியாக 75 வயது முதியவர் ஒருவர் இருக்கிறார். இளைஞர்களில் சுப்பிரமணி என்பவருக்கு இணையம் கைவந்த கலை. அவர் இணையம், கேமரா, எடிட்டிங் சப்போர்ட் செய்ய வயல்வெளியில், இயல்பாக, ஆர்ப்பாட்டம் இல்லாமல் சுவையாக சமைக்கும் இவர்களின் சமையல் முறைக்கு கடல்கடந்தும் தமிழர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். இதனையொட்டி இந்த யூடியூப் குழுவினர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினர்.
டைமன்ட் பட்டன்; முதல் தமிழ் யூடியூப் சேனல்:
யூடியூப் சேனலை யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம், ஆனால் வாடிக்கையாளர்களைப் பெறுவதற்குத் தனித்திறமை வேண்டும். அதை தங்களின் சமையல் கலை மூலம் நிரூபித்ததாலேயே வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் நிறுவனத்தினர் டைமன்ட் பட்டன் பெற்றுள்ளனர்.
யூடியூப் சேனல் நடத்தி ஒரு லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றால் சில்வர் பட்டன், 10 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றால் கோல்டன் பட்டனும் ஒரு கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றால் டைமன்ட் பட்டனும் வழங்கப்படுகிறது. Village Cooking சேனல் தமிழகத்திலேயே 1 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்ற முதல் யூடியூப் சேனலாகியிருக்கிறது. மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களையே புறம்தள்ளிவிட்டு வில்லேஜ் குக்கிங் சேனல் பெற்ற வெற்றிக்கு காரணம் ஜனரஞ்சகமான அணுகுமுறை என்கின்றனர் நெட்டிசன்கள்.