Vijayabaskar Properties: விஜயபாஸ்கர் சேர்த்த சொத்துக்கள் இது தான்... பட்டியல் போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை!
இல்லத்தரசியான ரம்யா M/s. Rasi Enterprises, V Infrastructure and Anya Enterprises ஆகிய நிறுவனங்களின் உரிமையாளராக உள்ளார். ஆனால், இந்த நிறுவனங்களின் ஒற்றை முதலீட்டாளாராக விஜயபாஸ்கர் உள்ளார்
2016-21 வரையிலான ஐந்து ஆண்டு காலகட்டத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திட்டமிட்டு வருமானத்துக்கு அதிகமான வகையில் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில், விஜயபாஸ்கர் முதல் குற்றவாளியாகவும், அவரின் ரம்யா இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அ.இ.அ.தி.மு.கவில், புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக இருந்துவரும் விஜயபாஸ்கர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விராலிமலை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2016, 2021 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும், 2013, நவம்பர், 1ம் தேதி முதல், 2021 மே 2ம் தேதி வரை தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு, மருத்துவக்கல்வி மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2016- 21 வரையிலான தனது பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமான வகையில் திட்டமிட்டு சொத்து சேர்த்துள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விஜயபாஸ்கருக்கு ரம்யா என்கிற மனைவியும், பள்ளிக்குச் செல்லும் இரண்டு மகள்களும் உள்ளனர். அன்னவாசல் பஞ்சயாத்தின் முன்னாள் தலைவரான இவரின் தந்தை சின்னத்தம்பி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும், அரசு ஒப்பந்ததாரராகவும் உள்ளார்.
விஜயபாஸ்கர் சொத்து விபரங்கள்:
முதல் குற்றவாளியான விஜயபாஸ்கர் M/s Rasi Blue Metals என்ற நிறுவனத்தின் உரிமையாளராகவும், M/s. Green land Hi-tech Promoters என்ற நிறுவனத்தின் பங்குதாரராகவும், Sri Vari Stones (p) Ltd and Iris Eco Power venture (p) Ltd ஆகிய நிறுவனங்களின் முதலீட்டாளராகவும் உள்ளார்.
இரண்டாவது குற்றவாளியான ரம்யா அவரின் துணைவியர். இல்லத்தரசியான இவர் M/s. Rasi Enterprises, V Infrastructure and Anya Enterprises ஆகிய நிறுவனங்களின் உரிமையாளராக உள்ளார். ஆனால், இந்த நிறுவனங்களின் ஒற்றை முதலீட்டாளாராக விஜயபாஸ்கர் உள்ளார்.
வருமானத்துக்கு அதிகமான வகையில் சொத்து சேர்ப்பு:
2016- 21 ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் மட்டும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் 57 கோடி மதிப்பிலான சொத்துக்களை வாங்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையியனர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தனது பதவிக்காலத்தின் போது:
6 கோடி ரூபாய் மதிப்பில் 7 டிம்பர் லாரிகள், 10 களவை இயந்திரங்கள், ஜேஜிபி இயந்திரம் (ரூ.6,58,78,466)
50 லட்சம் மதிப்பிலனான் பிஎம்டபிள்யூ நிறுவன கார் (ரூ. 53,33,156);
40 லட்சம் மதிப்பிலான 85.21 சவரன் நகை (ரூ. 40,58,975);
4 கோடி மதிப்பில் விவசாய நிலங்கள் (ரூ.3,99,05,400);
14 கோடியில் சென்னையில் சொந்த வீடு (ரூ.14,57,65,000) மற்றும் பல நிறுவனங்களில் 28 கோடி வரை முதலீடு செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், இழுப்பூர் கிராமத்தில் விஜயபாஸ்கரின் குடும்ப உறுப்பினர்கள் பேரில் மதர் தெரசா கல்வி மற்றும் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் கீழ் 14 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். அமைச்சராக இருந்த 5 ஆண்டு காலத்தில் கணக்கில் காட்டப்படாத பணத்தின் மூலம் தான் இந்த கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சந்தேகிக்கின்றனர்.