Vetri Duraisamy: 8 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல்; முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் இரங்கல்
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 12ஆம் தேதி வெற்றி துரைசாமியின் உடல் சட்லஜ் நதியில் மீட்கப்பட்டுள்ளது. விபத்தில் இறந்த வெற்றி துரைசாமியின் குடும்பத்தினருக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் உரையில், “இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன். சகோதரர் சைதை துரைசாமிக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் குறிப்பில், “ஒருங்கிணைந்த தென் சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சி முள்ளால் மேயருமான சைதை துரைசாமி அவர்களுடைய மகன் வெற்றி துரைசாமி பிப்ரவரி 4-ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனம் நிலை தடுமாறி சட்லஜ் நதிக்கரையில் விழுந்ததைத் தொடர்ந்து, அவரது உடலை கடந்த 8 நாட்களாகத் தேடிவந்த நிலையில், இன்று அவரது உடல் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
கழக நிறுவனத் தலைவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் தீவிர பற்றாளரும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் விசுவாசமிக்கத் தொண்டரும், கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டவரும், தனது வாழ்நாளில், தன்னால் இயன்ற உதவிகள் அனைத்தையும் ஏழை, எளியோருக்கு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து வருபவரும், தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்கள் பயன்பெறும் வகையில் கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருபவருமான அன்புச் சகோதரர் சைதை துரைசாமி , தாலாட்டி, சீராட்டி, அழகு பார்த்து வளர்த்த தன் ஒற்றை மகனை இழந்தது. அவருக்கு தாங்கிக்கொள்ள முடியாத ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். மகனை இழந்து மிகுந்த சோகத்தில் வாடும் சைதை துரைசாமி துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்.
பெற்ற மகனை இழந்து வாடும் அன்புச் சகோதரர் சைதை துரைசாமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும். எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், வெற்றி துரைசாமியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மேலும், இந்தத் துபரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் சைதை துரைசாமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அளிக்க, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.