ஸ்டெர்லைட் ஆலை 4 மாதங்கள் தற்காலிகமாக திறக்கலாம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல்
ஒரு பொருத்தமான செயல்முறை அடிப்படையில், இதற்கான அனுமதியை அரசு விரைவுப்படுத்தும். இந்த அனுமதி, ஒரு முறை நடவடிக்கையாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை, ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் நான்கு மாதங்கள் தற்காலிகமாக திறக்கலாம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளது. இருப்பினும், கடந்த காலங்களில் வேதாந்தா நிறுவனம் ஏற்படுத்திய நம்பிக்கையற்ற நிலைகளை கருத்தில் கொண்டு, சில அடிப்படை நிபந்தனைகளுடன் ஆக்ஸிஜன் உற்பத்தி நடைபெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு விதித்த நிபந்தனைகள்:
கொரோனா பெருந்தோற்று காலம் முடிவடையும் வரை, தமிழக மின்சார வாரியம் வழங்கும் மின்சாரத்தைப் பயன்படுத்தி ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு விரைவில் பிறப்பிக்கும். மனுதாரர் ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தாண்டி வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்க அனுமதியில்லை.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி எஸ்.பி, தூத்துக்குடி துணை ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (மாசுக் கட்டுபாட்டு வாரியம்), ஆக்ஸிஜன் உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற இரண்டு அரசு அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட மக்கள்/ ஸ்டெர்லைட் போராட்டக் குழு/ சுற்றுச் சூழல் அமைப்புகளைச் சேர்ந்த மூன்று நபர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும். மாவட்ட ஆட்சியர் இக்குழுவின் தலைவராக செயல்படுவார்.
இந்த குழு ஆக்ஸிஜன் உற்பத்தியை கண்காணிப்பதோடு,ஆலையின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் தீர்மானிக்கும். ஆக்ஸிஜன் ஆலை செயல்பாடு தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. வேதாந்தா நிறுவனம் ஆக்ஸிஜன் உற்பத்திக்கான மனித வளம் மற்றும் பிற நிபுணத்துவத்தை வழங்கும். அத்துடன் உற்பத்தி தொடர்பான அனைத்து செலவுகளையும் ஏற்கும்.
மருத்துவப் பயன்பாடுகளுக்கு மட்டும் மனுதாரர் ஒரு நாளைக்கு 1050 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்று இந்த நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இதில், 35 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை மட்டுமே உடனடியாக வழங்க முடியும் என்றும், சிலிண்டர்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லக்கூடிய திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை படிப்படியாகத் தான் அதிகரிக்க முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் உற்பத்திக்கு மின்சாரம், தண்ணீர் விநியோகம் தேவைப்படும். உற்பத்தி தொடங்குவதற்கு இதர பல சட்ட சட்டரீதியான அனுமதிகளும் தேவைப்படும். ஒரு பொருத்தமான செயல்முறை அடிப்படையில், இதற்கான அனுமதியை அரசு விரைவுபடுத்தும். இந்த அனுமதி, ஒரு முறை நடவடிக்கையாக இருக்கும். TANGEDCO உள்ளிட்ட இதர நிறுவனங்களுக்கு வேதாந்தா நிறுவனம் நிலுவைத் தொகை ஏதேனும் செலுத்த வேண்டியிருந்தால் உடனடியாக ஆக்ஸிஜன் உற்பத்திக்கு நேரடியாக தொடர்புடைய ஸ்டெர்லைட் தொழில்நுட்ப ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
ஊழியர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் உறுதி செய்யப்படும். எந்த சூழ்நிலையிலும், ஆக்சிஜன் உற்பத்தியைத் தவிர்த்து வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்க அனுமதி கிடையாது.
மாநிலத்தின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தி திறன் 330 மெட்ரிக் டன்னாக உள்ளது. தமிழகத்தின் தற்போதைய மருத்துவ ஆக்ஸிஜன் நுகர்வு 325 மெட்ரிக் டன்னாக உள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து காணப்படுவதால் உற்பத்தியை விட தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்பட அனுமதித்தால், தமிழகத்திற்கு அளிக்கப்படவேண்டும்.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் அம்மாநிலத்தின் மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம். தேவைக்கு அதிகமாக தயாரிக்கப்படும் செய்யப்படும் ஆக்ஸிஜன் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.
48 மணி நேரத்திற்குள் ஆக்ஸிஜனை இலவசமாக வழங்குவதற்கான அளவு, தரம் மற்றும் நேரம் குறித்த உத்தரவாதங்களை வேதாந்தா நிறுவனம் குழுவிடம் வழங்க வேண்டும். உற்பத்திக்கான அனைத்து செலவையும்,பொறுப்பையும் வேதாந்தா நிறுவனம் ஏற்கும். இவ்வாறு, தமிழக அரசு சமர்பித்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.