ABPNadu Exclusive: 'மோடி பிரதமராகும்போது, ஸ்டாலினால் முடியாதா?' - திருமாவளவன் நேர்காணல்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஏபிபிநாடு தளத்திற்கு இன்று நேர்காணல் அளித்தார்.
கடந்த வாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். அந்த விழா பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் ஏபிபிநாடுவிற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் சில முக்கியமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதன்படி,
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். அது சாத்தியமா?
ஏற்கெனவே அப்படி ஒன்று நடைபெற்றுள்ளது. 1977ஆம் ஆண்டு ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி பெரும் பங்கு ஆற்றினார். அதேபோல் ஈழ தமிழர்கள் பிரச்னைகளிலும் அவர் பல மாநில தலைவர்கள் ஒருகிணைத்தார். ஆகவே அதேமாதிரி தற்போது இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினு அந்த அளவிற்கான அரசியல் பலம் கொண்டவர். அவரால் இதை செய்ய முடியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் நம்புகிறது.
திமுகவிற்கு தமிழகம்,புதுவை தவிர வேறு எங்கும் கிளைகள் கிடையாது? அப்போது இருக்கும் போது எப்படி இதை செய்ய முடியும்?
இதை செய்வதற்கு அனைத்து மாநிலங்களிலும் கிளை இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. தற்போது மக்களவியில் திமுக நான்காவது பெரிய கட்சி. அதேபோல் மாநிலங்களவையில் திமுக கணிசமான அளவை வைத்துள்ளது. ஆகவே நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமசோதாவை நிறைவேற்றுவதில் திமுக எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது இதன்மூலம் தெரிகிறது. எனவே ஒரு கட்சியை கிளையை வைத்து மட்டும் அப்படி எண்ணிவிட முடியாது. அதன் அரசியல் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து குறித்து உங்களுடைய நிலை?
அவர் ஒரு கட்சியின் மாநில தலைவர் என்ற நிலையில் அந்த கருத்தை கூறியுள்ளார். ஆனால் ஒரு கட்சி 10 ஆண்டுகாலம் ஆட்சிப்புரியும் போது அந்தக் கட்சியின் மீது மக்களுக்கு எந்தவித வெறுப்பும் இருக்காது என்று சொல்ல முடியாது. மேலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியிலிருந்து எந்தவித வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. அவர்கள் பாதுகாப்பதாக கூறிய இந்து சமூகத்தினரே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே 2024 மக்களவைத் தேர்தல் என்பது மிகவும் முக்கியமான தேர்தல். இது ஜனநாயக சக்திகளுக்கு பெரிய சவாலான தேர்தலாக இருக்கும்.
2024 தேர்தலுக்கு யார் பிரதமர் வேட்பாளராக இருப்பார்?
மக்கள் எப்போதும் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யமாட்டார்கள். ஏனென்றால் மக்கள் பாஜக அல்லது காங்கிரஸ் என்பதை பார்த்து தான் வாக்களிப்பார்கள். ஆகவே தேர்தலுக்கு முன்பாக யார் பிரதமர் வேட்பாளர் என்று கூற தேவையில்லை. அதேபோல் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கும் போது மற்ற கட்சிகள் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். கடந்த தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்றதற்கு முக்கிய காரணம் இதுபோன்ற வாக்கு சிதறல்கள் தான்.
திமுக-காங்கிரஸிற்கும் இடையே பிரச்னை உள்ளதா?
நிச்சயமாக திமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே எந்தவித பிரச்னையையும் இல்லை. காங்கிரஸ் இல்லாத அணி என்பது பாஜகவிற்கு ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்திவிடும். அந்தச் சூழல் ஏற்படாமல் இருக்க திமுக இந்த முயற்சியை எடுக்க வேண்டும் என்று நான் கூறினேன்.
பிரதமர் வேட்பாளராகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகுதி வாய்ந்தவரா?
பிரதமர் வேட்பாளராக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனென்றால் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த மோடி தற்போது பிரதமராக உள்ளார். அவர் தற்போது இந்தியாவை ஆளும் போது ஏன் தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமராக இருந்தால் ஆட்சி செய்ய முடியாதா? நிச்சயம் முடியும் என தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பல கேள்விகளுக்கு அவர் இந்த நேர்காணலில் பதிலளித்துள்ளார். அந்த நேர்காணலை பார்க்க
மேலும் படிக்க: மரபணு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட 5 மாத குழந்தை - 16 கோடி தேவைப்படுவதால் செய்வதறியாமல் தவிக்கும் பெற்றோர்