Thirumavalavan: தி.மு.க. கூட்டணியில் சிக்கலா? ஆதவ் அர்ஜூனன் மீது நடவடிக்கை? திருமாவளவன் பரபரப்பு பேட்டி
தி.மு.க. - வி.சிீ.க. இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நீண்ட வருடங்களாக தி.மு.க.வின் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் உள்ளது. இந்த நிலையில், மது ஒழிப்பு மாநாடு விவகாரம், ஆதவ் அர்ஜூனன் கருத்து என அடுத்தடுத்து தி.மு.க. - வி.சி.க. இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், இந்த மோதல் கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
தி.மு.க. - வி.சி.க. கூட்டணியில் சலசலப்பா?
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்த திருமாவளவன் இதற்கு பதிலளித்தார்.
“ கூட்டணி கட்சிகளுக்கு இடையில் எந்த சலசலப்பும் இல்லை. விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாக வாய்ப்பும் இல்லை. என்னுடைய ஊடக பக்கத்தில் பதிவான ஒரு சின்ன வீடியோ ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலம் பங்கு என்ற கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக் கொண்டனர். அந்த விவாதம் மேலும் மேலும் விவாதத்திற்கு இடம் அளித்துள்ளது. அதனால், தி.மு.க. – வி.சி.க. இடையே எந்த சிக்கலும் எழாது. எழுவதற்கும் வாய்ப்பு இல்லை.” என்றார்.
ஆதவ் அர்ஜூனன் மீது நடவடிக்கையா?
அவரிடம். ஆ.ராசா பற்றி ஆதவ் அர்ஜூனன் பேசிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் சொன்ன ஆதவ் அர்ஜூனன், கட்சியில் உள்ள முன்னணி தோழர்களுடன் கலந்தாலோசித்து உட்கட்சி விவகாரங்களை, முன்னணி பொறுப்பாளர்கள் என உயர்நிலை குழு கொண்ட தோழர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறேன். மீண்டும் நாங்கள் கலந்து பேசி இதுதொடர்பான முடிவை எடுப்போம்.”
இவ்வாறு அவர் கூறினார்.
மது ஒழிப்பு மாநாடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு:
அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த நாளில் மது ஒழிப்பு மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கள்ளக்குறிச்சியில் நடத்த உள்ளது. கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாட்டிற்கு வி.சி.க. அ.தி.மு.க.வை அழைத்தது முதலே பிரச்சினை வெடிக்கத் தொடங்கியது.
பின்னர், ஆட்சி அதிகாரத்திலும் சம பங்கு என்று திருமாவளவன் வெளியிட்ட வீடியோவும் தி.மு.க. – வி.சி.க. கூட்டணியில் என்ன நடக்கிறது? என்ற கேள்வியை ஏழுப்பியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த சமயம் அமெரிக்காவில் இருந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் திருமாளவன் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து விளக்கம் அளித்தார்.
ஆதவ் அர்ஜூனன் கருத்து:
இந்த நிலையில், வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனன் நடிகராக இருந்து எம்.எல்.ஏ. ஆன 4 ஆண்டுகளிலே உதயநிதி துணை முதல்வராகும்போது. திருமாவளவன் ஏன் ஆகக்கூடாது? என்றும், வட தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் இல்லாமல் தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்றும் பேசியிருந்தார்.
கூட்டணி கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஒருவர் இதுபோன்ற கருத்தை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஆதவ் அர்ஜூனனுக்கு பதில் அளித்த ஆ.ராசாவிற்கும் சமூக நீதி குறித்து ஆதவ் அர்ஜூனன் கேள்வி எழுப்பியது கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக வி.சி.க. – தி.மு.க. இடையே கருத்து மோதல் நிலவி வரும் சூழலில், அதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் திருமாவளவன் கூட்டணி குறித்து பேசி முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.