BJP: 'பா.ஜ.க. வேகமாக வளர்கிறது.. யார் விலகினாலும் எந்த பாதிப்பும் இல்லை' - வானதி சீனிவாசன்
அதிகமான புதிய நபர்களால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு சிலர் விலகுவதால் எங்களது கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “வடமாநில தொழிலாளர்கள் வழக்குப்பதிவு செய்கிறார்களே தவிர, மாநில அரசோ, முதலமைச்சரோ எந்த கருத்தும் தெரிவிக்காததால், போலி செய்திகளோடு சேர்ந்து வடமாநிலங்களில் பரவியது. ஹோலி பண்டிகை வந்ததால், அதற்காகவும் பலர் போய் கொண்டு இருக்கிறார்கள். இதனால் பதட்டமான சூழல் உருவானது. இப்பிரச்சனையை முளையிலேயே கிள்ளி எறிந்து இருந்தால் இதுபோன்ற சூழல் வந்திருக்காது.
வடமாநில தொழிலாளர்கள்:
வடமாநில தொழிலாளர்கள் கோவை, திருப்பூர் பகுதியில் உள்ள ஜவுளி துறையில் அதிகளவில் இருக்கிறார்கள். இப்பிரச்சனையை அரசு சரியாக கையாளததால் வேலை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பகுதியை அரசு பழி வாங்கும் நோக்கத்தோடு நடத்துவதால், வடமாநில தொழிலாளர் பிரச்சனையிலும் பாதிக்கட்டும் என விட்டு உள்ளார்களோ என்ற சந்தேகம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என்ற முதலமைச்சர் கருத்து குறித்த கேள்விக்கு, ”முதலமைச்சர் இந்த மாதிரி ஆபத்து உணர்கிறார் என்றால், இதற்கு மூல காரணம் யார்? கடந்த பத்து ஆண்டுகளில் இது நடந்ததா? இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சமூக வலைதளங்களில் இந்தி படித்தால் வேலை கிடைக்குமா? பானிபூரி விற்கிறார்கள் என அமைச்சர்கள் பேசினார்கள். தமிழ் மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை என சிலரின் வெறுப்புணர்வு தூண்டும் பிரச்சாரத்தை வேடிக்கை பார்த்து விட்டு, பிரச்சனை வந்த பிறகு ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என சொல்கிறார்கள்.
இதை உருவாக்கியது நீங்கள். அதை டீல் பண்ண வேண்டியது நீங்கள். உங்கள் தரப்பில் உள்ள தோல்விகளை மறைத்து விட்டு அடுத்தவர்கள் மீது பழிபோடும் முயற்சியை முதலமைச்சர் செய்ய கூடாது.
இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநிலத்தில் இருந்து வருபவர்களும் இந்தியர்கள் தானே. அவர்களை பற்றி அமைச்சர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்து விட்டு, இப்போது வேறு ஒருவர் மீது எதற்கு பழி போடுகிறீர்கள்? நடவடிக்கை எடுக்க வேண்டியது நீங்கள். அரசியலுக்காக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அடுத்தவர் மீது குறை சொல்வது சரியல்ல” எனத் தெரிவித்தார்.
எந்த பாதிப்பும் இல்லை:
தொடர்ந்து பேசிய அவர், “மாற்று கட்சியில் இருந்தும், பிரதான கட்சியில் இருந்தும் பலர் பாஜகவில் இணைகிறார்கள். பாஜக ஐடி பிரிவு தலைவர் ஒரு விஷயத்தை சொல்லி வெளியே சென்றுள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொரு நபர்களும் வெளியே செல்லும் போது, கட்சி தலைமைப் பற்றி கருத்து சொல்கிறார்கள். இதனால் பா.ஜ.க.விற்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. அதிகமான புதிய நபர்களால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு சிலர் விலகுவதாலும், இன்னொரு கட்சியிலும் சேர்வதாலும் எங்களது கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
ஒரு தேர்வு நடந்தால் விருப்பம் உள்ளவர்கள் தயாராக வேண்டும். தேசிய அளவில் நடக்கும் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் குறைவாக தேர்ச்சி பெறுகிறார்கள் என்றால், நாம் தான் அக்கறை எடுக்க வேண்டும். அதற்காக பிரதமரிடம் புகார் சொல்லி என்ன செய்வது? தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சொல்வது எந்த விதத்தில் நியாயம்?மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள மாநில அரசு தயார் படுத்த வேண்டும். மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
கல்வீசும் அமைச்சர்கள்:
பாஜகவின் ஏ டீம், பி டீம் என ஏன் சொல்கிறீர்கள்? தேசிய அரசியலுக்கு செல்லும் போது, இதுபோல பல டீம்களை டீல் செய்ய வேண்டியிருக்கும். தேசிய தலைவர்களோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரிய வேண்டும். நீங்கள் தேசியத்தை நம்புகிறீர்களா? தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசுபவர்களை எப்படி நடவடிக்கை எடுக்கிறீர்கள் எனக் காட்டிய பிறகு, தேசிய அரசியலுக்கு வாருங்கள்.
திமுக அமைச்சர்கள் கல் எடுத்து வீசுகிறார்கள். பெண்களை இழிவாக பேசினார்கள். ஓட்டு போட்ட மக்களை இவ்வளவு இழிவுபடுத்துகிறார்கள். திமுகவினர் எஜமானர்கள் மாதிரியும், ஒட்டுபோட்ட மக்களை அடிமைகளாகவும் நினைக்கிறார்கள். சுயமரியாதை பற்றி பேசி விட்டு, காலில் விழும் கலாச்சாரத்தை கொண்டு வந்தவர்கள். மக்களின் சுயமரியாதை இருக்கிறது தெரிந்து பேச வேண்டும்” எனத் தெரிவித்தார்.