‘அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறதா?’ - வானதி சீனிவாசன் விளக்கம்
"கூட்டணி பொருத்தவரை இதை தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. கூட்டணி தொடர்பாக வேறு எந்த ஒரு பதிலையும், ஒரு வார்த்தையையும் சொல்ல நான் விரும்பவில்லை"
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது தொடர்பாக பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் முதல் கூட்டத்தொடரில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பிரதமர் மோடி முயற்சியால் தாக்கல் செய்துள்ளனர். சமுதாயத்தில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு அரசியல் அதிகாரம் இருக்கும் பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இடம் பெற மோடி ஆட்சியில் செயல்வடிவம் பெற்றுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையில் பெண்களை முன்னிறுத்தி பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான பெண்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. பெண் கல்வி, சுகாதாரம், பொருளாதார முன்னேற்றம் வளர்ந்து வரும் வேளையில், பெண்களுக்கு எதிரான சமூக கொடுமைகள் குறைந்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இம்மசோதாவிற்கு ஆதரவு அளித்து, ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோளை வைக்கிறேன். நாட்டில் மாற்றத்திற்கான மசோதாக்கள் வரும் போது, அரசியல் குறுகிய கண்ணோட்டத்துடன் விமர்சனம் வருவது வழக்கம். விசிக தலைவர் திருமாவளவன் அரசியல் ரீதியாக விமர்சனம் வைப்பதை விட்டு விட்டு, இம்மசோதாவிற்கு ஆதரவு தர வேண்டும். எந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அதற்கென வழிமுறை உள்ளது. அதன்படி இச்சட்டம் நிறைவேறும். பாஜக பெண்களுக்கு எதிரானது என்ற அவரது விமர்சனங்களுக்கு மாற்றாக, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை ஜீரணிக்க முடியாத விமர்சனமாக இதைப் பார்க்கிறேன்.
வாக்கு வங்கி அரசியல் பற்றி பேசும் கனிமொழி 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென 3 நாட்களுக்கு முன்பு தீர்மானம் போட்டார்கள். எந்த வாக்கு வங்கிக்காக திமுக தீர்மானம் போட்டது? யாரை ஏமாற்ற தீர்மானம் போட்டீர்கள்? ஜனாதிபதியாக ஒரு உயர்ந்த இடத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்மணியை அமர்த்தியிருப்பது சனாதனம் என்றால், அந்த சனாதனத்தை வரவேற்க பாருங்கள். குடியரசு தலைவரை எங்கு அழைக்க வேண்டுமென விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையில் இருந்து என்றும் பாஜக விலகியது இல்லை. ஜனாதிபதியை அவமரியாதை செய்யும் வகையில் ஒரு பட்டத்தை சூட்டி அரசியல் செய்வது அவமானகரமானது. திமுக அரசு கோவில்களுக்கு எதிராக, இந்து விரோதமாக எப்படி செயல்படுகிறது என்பது மக்களுக்கு தெரியும். விநாயகர் சதுர்த்தி விழா சமுதாய விழாவாக மாறிக் கொண்டிருக்கிறது.திமுகவிற்கு சாமி, கோவில், பூஜை என்றால் அலர்ஜி இருக்கிறது. அதனால் எப்படி எல்லாம் அரசியல் அதிகாரத்தை வைத்து தடுக்க நினைக்கிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி முதலவர் வீட்டில் கொண்டாடி இருப்பார்கள். சில நாட்களுக்கு பிறகு வீடியோ வரும். பொது வெளியில் இந்து மத நம்பிக்கையை சீரழிப்பதை திமுக தொடர்ந்து செய்கிறது. 15 இலட்ச ரூபாய் பணம் தொடர்பாக பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் இந்தியில் பேசியதை இவர்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. விமர்சனம் வைக்க வேறு எதுவும் இல்லை என்பதால், அதனால் பொய் பிரச்சாரத்தை செய்து கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு, “தேசிய தலைமை தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் இடத்தில் உள்ளது. அதனால் கூட்டணியில் தொடர்வதா?, யார் இருப்பது?, யார் கூட்டணியின் தலைமை எல்லாம் கட்சி தலைமை முடிவு எடுத்து அறிவிக்கும். அவ்வளவு தான். கூட்டணி பொருத்தவரை இதை தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. கூட்டணி தொடர்பாக வேறு எந்த ஒரு பதிலையும், ஒரு வார்த்தையையும் சொல்ல நான் விரும்பவில்லை. கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். எப்படி கேள்வி கேட்டாலும், எனது பதில் இதுதான்” எனப் பதிலளித்தார்.