ABP Nadu Anniversary: 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஏபிபி நாடு.. வைரமுத்து, விக்கிரமராஜா, தருமபுரம் ஆதீனம் வாழ்த்து
ஏபிபி நாடு நிறுவனம் 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், மென்மேலும் வளர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
ஏபிபி நாடு நிறுவனம் 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், மென்மேலும் வளர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா
ஏபிபி நாடு சேனல் இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கிய 2 ஆண்டுகளில் பல்வேறு நன்மதிப்புகளைப் பெற்று, மக்கள் மத்தியில் நல்ல பதிவுகளை செய்துக் கொண்டிருக்கிறது. இந்த சேனல் தொடர்ந்து நற்பணிகளை செய்து மக்களுக்கு தொண்டாற்றவும், அவர்களின் குறைகளை அரசுக்கு வெளிப்படுத்தக்கூடிய சேனலாக தொடர்ந்து செயல்பட வேண்டும். ஈரோட்டில் நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் 40வது வணிகர் தின சங்க மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த மாநாடு என்பது தமிழ்நாட்டில் உள்ள சாமானிய மக்களை பாதுகாக்கக்கூடிய மாநாடாகவும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை போக்கக்கூடிய மாநாடாகவும் இருக்கும். ஆகவே பல லட்சம் வணிகர்கள் சார்பாகவும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பாகவும் இந்த ஏபிபிநாடு சேனலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வைரமுத்து
ஏபிபி நாடு .. வெற்றிகரமாக 2 ஆண்டுகளை கடந்து 3 ஆம் ஆண்டில் எட்டு வைப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். 2 ஆண்டுகளில் 10 ஆண்டுகளை கடந்து செய்த சாதனைகளை ஏபிபி நாடு செய்திருக்கிறது என்பது பரவலாக பேசப்படுகிறது. நண்பர்கள் இதுகுறித்து உரையாடும் போது ஏபிபி நாடு பற்றி நல்ல செய்திகளையே எனக்கு தருகிறார்கள். இது யூட்யூப்பில் மட்டும் 2.5 கோடி வாசகர்களையும், பேஸ்புக்கில் 3 கோடி வாசகர்களையும், இணையத்தில் ஒரு கோடி நேயர்களையும் கொண்டிருப்பது செய்திகளின் நம்பகத்தன்மையை காட்டுகிறது.
ஒரு செய்தி பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதை விட உண்மையாக இருக்க வேண்டும் என்பதும், அந்த உண்மைத்தன்மை நாட்டுக்கு நன்மையாக இருக்க வேண்டும் என்பதையும் ஏபிபி நாடு முக்கியமாக கருதுகிறது என்பதை நாம் உணர முடிகிறது. செய்திகளை சேகரிக்கிறவர்கள், செய்திகளுக்காக மொழி தயாரிக்கிறவர்கள், செய்திகளை வாசித்து வழங்குகிறவர்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஏபிபி நாடு.. 30 ஆண்டுகளையும், 100 ஆண்டுகளையும் கடந்து தமிழ்நாடு மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்.. பாராட்டுகிறேன்.
தருமபுரம் ஆதீனம் 27 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
ஏபிபி நாடு இன்றைய மக்கள் மனதின் தேவையை பூர்த்திச் செய்ய பல செய்தி பிரிவுகள், ஊடகங்கள் வளர்ந்திருக்கின்றன. அந்த வகையில் நூறாண்டு காலம் தொட்ட ஏபிபி நாடு சேனல் தமிழகத்தில் காலூன்றி 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது பல துறைகளில் மக்களை கவர்ந்து இருக்கிறது. அரசியல், ஆன்மீகம், கல்வி போன்ற துறைகளில் மக்களுக்கு நல்ல பணிகளை செய்கிறது.
ஊடகம் என்பது ஒருதலைப் பட்சமாக இல்லாமல் பொதுவாக நின்று எல்லோருக்கும் நல்லது செய்யும் விதமாக அமைய வேண்டும். அதனை ஏபிபி நாடு நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் நூற்றாண்டுகள் இருந்து மக்களின் பணிகளை செவ்வென செய்து மக்கள் மனதில் பதிவு செய்ய வேண்டும் என வேண்டி ஆசீர்வதித்துக் கொள்கிறேன்.