(Source: ECI/ABP News/ABP Majha)
Vijayakanth Death: 'மனிதநேயத்தோடு இருக்கும் ஒரு அரசியல்வாதி விஜயகாந்த்’ - அஞ்சலி செலுத்திய பின் நிர்மலா சீதாராமன்..
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டது. நேற்று காலை நுரையீரல் அழற்சி காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.
அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்தை கடைசியாக காண தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேற்று தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது பூத உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் இருந்து சென்னை தீவுத்திடலில் மாற்றப்பட்டது. அங்கேயும் மக்கள் கூட்டம் கட்டுகடங்காமல் வந்த வண்ணம் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என லட்சக்கணக்கானவர்கள் வருகை தருகின்றனர். நேரில் வர முடியாத பிரபலங்கள் சமூக வலைத்தளத்திலும் வீடியோ மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்று மத்திய அரசு சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கரு நாகராஜன், பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். அஞ்சலி செலுத்திய பின் பேசிய பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ கேப்டன் மறைந்த செய்தி கேட்டு பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக என்னை நேரில் செல்ல வலியுறுத்தினார். இந்த துக்கத்தில் நாமும் நிச்சயம் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தார். பிரதமர் மோடி சார்பில் மலர் வளையம் வைத்தேன். கேப்டன் வீட்டிற்கு வரும் யாரும் சாப்பாடு இல்லாமல் திரும்பியது இல்லை. மிகவும் இலகிய மனம் கொண்டவர். தனக்கு கிடைத்தது பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். பாகுபாடு வேறுபாடு கிடையாது என கூறியவர், புதிய வடிவத்தை உருவாக்கியவர். மனிதநேயத்தோடு இருக்கும் ஒரு அரசியல்வாதி. இது போன்ற ஒரு அரசியல் தலைவரை பார்க்க முடியாது. அப்படிப்பட்ட ஒருவர் நம்மிடையே இல்லை, அந்த துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தை இல்லை. இந்த நேரத்தில் வெயில் மழை பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்துள்ளனர். அனைவருக்கும் எனது துக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல தலைவரை நாம் இழந்துவிட்டோம். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.