Uniform Civil Code: ”ஒரேமாதிரியான சட்டம் எதற்கு? ஒரே மாதிரியான உரிமைக்கான சூழ்நிலை வேண்டும்” - கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும்
ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டுமென்று இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்திக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பன்முகச் சமூகக் கட்டமைப்பிற்குப் பெயர் பெற்ற இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்திட இக்கடிதத்தினை எழுதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சீர்திருத்தங்களின் அவசியத்தை தாம் உணரும் அதேவேளையில், பொது சிவில் சட்டம் ஒரு கடுமையான அச்சுறுத்தலை முன்வைக்கிறது என்றும், நமது சமூகத்தின் பல்வேறுபட்ட சமூகக் கட்டமைப்பிற்கு சவால் விடுப்பதாகவும் உள்ளது. பொது சிவில் சட்டத்தினை அமல்படுத்துவதை தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்ப்பதற்கான காரணங்களையும் முதலமைச்சர் பட்டியலிட்டுள்ளார்.
அதில்,
அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் பாதுகாப்புகள்
மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் முக்கிய பகுதி என்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 25-ன்படி, “ஒருவர், தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்குமான உரிமையை உறுதி செய்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி அந்தந்த சமூகங்களின் பெரும்பாலான தனிப்பட்ட சட்டங்களுக்கு மத நடைமுறைகள் அடிப்படையாக உள்ளன என்றும், அத்தகைய தனிப்பட்ட சட்டங்களில் எந்த மாற்றத்தையும், மத சமூகங்களின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கலாச்சார மற்றும் மதப் பன்முகத்துவம், கூட்டாட்சி அமைப்பு, சமூக ஒருங்கிணைப்பு, வரலாற்றுப் பின்னணி, சிறுபான்மையினர் உரிமைகள், சமூகப் பொருளாதார தாக்கங்கள், இணக்கமான வாழ்வுக்கு முன்னுரிமை ஆகிய தலைப்புகளின் கீழ் எதிர்ப்புக்கான காரணங்களை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
நமது மகத்தான தேசத்தின் கட்டமைப்பை உருவாக்கும் பல்வேறு சமூகங்களிடையே இணக்கமான வாழ்வை வளர்ப்பதே நமது
முதன்மை குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியான சட்டத்தைத் திணிப்பதற்குப் பதிலாக, மதங்களுக்கிடையிலான உரையாடல்களை வலுப்படுத்துவதிலும், சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதிலும், இந்தியாவை வரையறுக்கும் வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துவோம். சட்டங்களில், ஒரேமாதிரியான தன்மையை கொண்டுவர முயற்சிப்பதைவிட, அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஒரேமாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதை
நமது நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.