MK Stalin Speech: "உங்களில் ஒருவன் புத்தகத்தில் என்னதான் இருக்கு" - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓபன் டாக்!
என்னுடைய 23வது வரையிலான வாழ்க்கை வரலாறுதான் இந்த உங்களில் ஒருவன் சுயசரிதையின் முதல் பாகம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை, நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “கலைஞர் மறைவுக்கு பிறகு கோடிக்கணக்கான தி.மு.க. உடன்பிறப்புகளின் தலைவராக நான் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது பேசும்போது சொன்னேன். கலைஞர் போல எனக்கு எழுதத் தெரியாது. கலைஞர் போல எனக்கு பேசத் தெரியாது. ஆனால், அனைத்தையும் நான் முயன்று பார்ப்பேன். அப்படி நான் செய்த முயற்சிதான் இந்த புத்தகம்.
தி.மு.க. தலைவர் என்ற பெருமையால் அல்ல. தமிழக முதல்வர் என்ற கர்வத்தால் அல்ல. எப்போதும், என்றென்றும், எந்த சூழ்நிலையிலும் உங்களில் ஒருவனாகதான் நான் இருக்க வேண்டும். அதைத்தான் எந்த நாளும் இந்த ஸ்டாலின் மறக்கமாட்டேன். அதனால்தான் எனது வாழ்க்கை வரலாற்றிற்கு உங்களில் ஒருவன் என்று பெயர் சூட்டியுள்ளேன். நீங்கள் உங்களை விட உயரமான இடத்திற்கு என்னை கொண்டு சென்றாலும், என்றுமே நான் உங்களில் ஒருவன்தான்.
கலைஞரின் மகனாக என்னை கழகத்தார் நினைத்தபோது, உங்களில் ஒருவனாகதான் நான் செயல்பட்டிருக்கிறேன். செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இளைஞரணித் தலைவராக, கழகத்தின் பொறுப்பாளராக, அமைச்சராக, துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகும் அப்படிதான் செயல்பட்டேன். தமிழ்நாட்டின் முதல்வராக ஆன பிறகும் அப்படிதான் செயல்பட்டேன். செயல்பட்டுக் கொண்டிருப்பேன். எனது வாழ்நாள் முழுவதும் உங்களில் ஒருவனாகதான் செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்.
மேலும் படிக்க : Ungalil Oruvan Book Release: ஸ்டாலின் வயதை என் தாய் நம்பவில்லை; கூகுளில் தேடினோம்.. கலகலக்க வைத்த ராகுல்.. வெடித்து சிரித்த ஸ்டாலின்!
சென்னை மேயராக நான் பொறுப்பேற்றபோது நான் பதவி என்று போட்டேன். கலைஞர் அதை திருத்தி பொறுப்பு என்று போட்டார். கலைஞர் செய்த அந்த திருத்தம்தான் எனது வாழ்வில் மறக்கமுடியாத பெரிய பாடம் ஆகும். அத்தனை பொறுப்பில் எத்தனை உயர்விற்கு நான் வந்தாலும் என்றுமே உங்களில் ஒருவன்தான் நான். உங்களில் ஒருவனான எனது அனுபவத்தை சிலவற்றை, இந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டும் என்பதற்காக நான் அதை கடமையாக கருதி சின்ன, சின்ன பகுதிகளாக நான் எழுதி வைத்திருந்த பதிவுகளை தொகுத்துள்ளதுதான் இந்த புத்தகம். என்னுடைய 23வயது வரையிலான வாழ்க்கைதான் இந்த புத்தகம்.
1976ம் ஆண்டு பிப்ரவரி 1-ல் நான் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நான் சென்னை சிறையில் அடைக்கப்பட்டேன். இதற்கு இடைப்பட்ட காலம்தான் இந்த புத்தகம். நான் அரசியல் பயிராகதான் வளர்ந்தேன் என்பதை இந்த புத்தகம் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். சென்னை மேயராக நான் பொறுப்பேற்றபோது, பத்திரிகையாளர் ஒருவர் என்னிடம் அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்ன ஆயிருப்பீர்கள்? என்று கேட்டனர். அதற்கு நான் அரசியலில்தான் இருந்திருப்பேன் என்றேன். பள்ளிக்கு சென்றாலும் கழகம், கழகம், கழகம் என்று இருந்தேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை ராகுல்காந்தி வெளியிட்டார். இந்த விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்