Udhayanidhi Stalin: சனாதனத்தைத்தான் பேசினேன்; பேசுவேன்; மோடி பேசுனதுக்கு அர்த்தம் என்ன? - சரமாரியாக சாடிய அமைச்சர் உதயநிதி
சனாதன தர்மம் விவகாரத்தில் பாஜக வழக்கம்போல் உண்மையை திரித்து பொய்களை பரப்புவதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சனாதன தர்மம் விவகாரத்தில் பாஜக வழக்கம்போல் உண்மையை திரித்து பொய்களை பரப்புவதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி பேட்டி:
சென்னையில் நடைபெற்ற 94-வது அகில இந்திய எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியன் ரயில்வேஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் பாிசளிப்பு விழா எழும்பூாில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின்பு அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சனாதான தர்மம் தொடர்பான அவரது பேச்சுக்கு, பாஜகவின்ர் கடும் எதிர்வினையாற்றுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
”பொய்களை பரப்பும் பாஜக”
பதிலளித்து பேசிய உதயநிதி, ”நான் சரியாக தான் சொன்னேன், வழக்கம் போல அதை மாற்றி, பாஜக பொய் செய்தியை பரப்பு வருகிறது. நேற்று முன் தினம் நடைபெற்ற I.N.D.I.A கூட்டணியின் வெற்றி அவர்களுக்கு பாதிப்பையும், தடுமாற்றத்தையும் கொடுத்திருக்கிறது. அந்த வெற்றியை திசைத்திருப்பவே இப்படி பேசி வருகிறார்கள். ஒட்டுமொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் முன்பே சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது, இனப்படுகொலை என நான் சொன்னதாக சிலர் பேசுகின்றனர்.
திமுக, காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்படுவார்களா?
மீண்டும் சொல்கிறேன், சனாதன தர்மத்தை மட்டுமே விமர்சித்தேன், சனாதன கோட்பாடுகளை மட்டுமே ஒழிப்பேன் என்று சொன்னேன். இதையே தொடர்ந்து பேசுவேன். இனப்படுகொலைக்கு அழைத்தேன் என்று ஒரு சிலர் பைத்தியக்காரத்தனமாக, சிறுபிள்ளைத்தனமாக பேசி இருக்கிறார்கள். சிலர் திராவிடம், கம்யூனிசத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படியானால் திமுகவினர் கொல்லப்பட வேண்டுமா? காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் மோடி பேசி வருகிறார். அப்படியானால் காங்கிரஸ்காரர்கள் அனைவரையும் பிடித்துக் கொல்லப் போகிறார்களா?
வழக்குகளை சந்திக்க தயார்
சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்றால் எதுவும் மாறக்கூடாது, அனைத்தும் நிரந்தரம். ஆனால் மாற்றம் வேண்டும் என்பது தான் திராவிட மாடல். அனைவரும் சமமாக இருக்க வேண்டும். என் மீது என்ன வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். ஒரே குலம், ஒரே கடவுள் என்பது திமுகவின் கொள்கை” என அமைச்சர் உதயநிதி கேள்வி பேசினார்.
உதயநிதி விமர்சனமும் - எதிர்ப்பும்:
கடந்த சனிக்கிழமை அன்று சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி, ”சனாதன தர்மம் மக்களை சாதி அடிப்படையில் பிரித்து சமத்துவமின்மை மற்றும் சமூக அநீதியை ஊக்குவிக்கிறது. இது சமூக முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக உள்ளது” என குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக பேசிய பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும்” என்று உதயநிதி பேசியதாக குற்றம்சாட்டினார். பாஜக தலைவர்கள் பலரும் உதயநிதியின் பேச்சுக்கு கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். உதயநிதியை கைது செய்ய வேண்டும் எனவும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.