Udhayanidhi Stalin: சனாதன தர்ம விவகாரம்: ட்விட்டரில் சொல்லாமல் மெசேஜ் சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சனாதன தர்ம விவகாரம் பற்றியெறியும் இந்த வேளையில், சொல்லாமல் மெசேஜ் சொல்லி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பதிவை போஸ்ட் செய்துள்ளார்.
சனாதன மாநாட்டில் பங்கேற்ற பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”தமிழ்நாட்டில் டெங்கு, மலேரியா, கொரோனா போன்றது சனாதன தர்மம். சனாதன தர்மத்தை எதிர்க்கக்கூடாது, ஒழித்துக்கட்டவேண்டும். ஒழித்துக்கட்டுவோம்” என தெரிவித்தார்.
— Udhay (@Udhaystalin) September 11, 2023
இந்த நிலையில், சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்லாமல் சொல்லும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசுக்களை அழிக்கும் கொசுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டது போன்ற புகைப்படத்தை மட்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது அதிக அளவில் ரீ-ட்வீட் செய்யப்பட்டு வருகிறது.
சனாதன தர்மம் குறித்து என்ன பேசினார் அமைச்சர் உதயநிதி:
இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. `சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் `சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.
கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம் ஆகும். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்.
சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் வேறு ஒன்றும் கிடையாது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது.
யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்.
நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இது நூற்றாண்டு. வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களுக்கு இது 200வது ஆண்டு. தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் நடந்த வைக்கம் போராட்டத்திற்கும் இது நூற்றாண்டு. அதேபோல் தமிழ்நாட்டு மக்களுடைய உரிமைகளை வென்றெடுக்கத் தோன்றிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இது பவள விழா ஆண்டு. இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற ஆண்டாக இந்த ஆண்டு இருக்கின்றது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பாக நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் இருக்கும்போது கூட ஸ்கூலில் காலையில் உணவு போடுவதால், ஸ்கூல் கழிப்பறை, கக்கூஸ் நிரம்பி வழியுது என்று ஒரு பேப்பரில் செய்தி போடுகிறார்கள்.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உடனே சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு போட்டார்கள். நிலாவுக்குச் சந்திராயன் விடுற இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படிச் செய்தி போடுகிறதென்றால், நூறு ஆண்டுகளுக்கு முன்னே என்ன ஆட்டம் போட்டிருப்பார்கள் என அந்த ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார்கள்.
நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் அவருடைய `நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில் எழுதி இருக்கிறார். அவருடைய அப்பா முத்துவேல் தாத்தா அவர்கள் கலைஞருடைய ஐந்தாவது வயதில் பள்ளிக்கூடக் கல்வியுடன் சேர்த்து இசைக்கல்வியும் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார்கள். ஆனால், இசையைப் பள்ளியில் சேர்ந்து கற்றுக் கொள்வதற்கு கலைஞர் அவர்களுக்கு ஈடுபாடும் இல்லை. ஆர்வமும் இல்லை. அதற்கான காரணத்தையும் அவர் அந்த `நெஞ்சுக்கு நீதி’ நூலில் தெரிவித்திருக்கிறார்.
என்ன காரணம் என்றால், இசைக் கல்வி கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், பயிற்சிக்கு சட்டை போட்டுக் கொண்டு போகக்கூடாது. துண்டை இடுப்பில் தான் கட்டிக்கொண்டு போகவேண்டும். காலில் செருப்புப் போடக்கூடாது. இப்படிச் சாதி மத சாஸ்திர சம்பிரதாயம் என்பதன் பெயரால் நடத்தப்படும் கொடுமையை என்னுடைய பிஞ்சு மனம் வன்மையாக எதிர்க்கக் கிளம்பியதுதான், நான் இசைக் கல்வி கற்க தனக்கு ஆர்வம் ஏற்படவில்லை என கலைஞர் தெரிவித்திருக்கிறார்.
அந்த வயதில் கலைஞரின் பிஞ்சு மனதில் சனாதனத்திற்கு எதிராக எரிமலை வெடித்துள்ளது. அதனால்தான் தன்னுடைய ஐந்து வயதில் ஆரம்பித்த அந்தப் போராட்டம், 95 வயது வரைக்கும் கலைஞர் அவர்கள் சனாதனத்தை எதிர்த்து பெரும் போரை நடத்தியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் மாற்றக்கூடாது என்று எதுவுமே இல்லையென்று எல்லாத்தையும் மாற்றிக் காட்டியவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். சினிமாவில் சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்களைப் பேசிக்கொண்டிருந்தபோது, கலைஞர் அவர்கள் தான் தன்னுடைய பேனாவை ஈட்டியாக்கி, `எந்தக் காலத்திலடா அம்பாள் பேசினாள்’ என `பராசக்தி’ திரைப்படத்தில் என்று வசனம் வைத்தார்.
சனாதனம்:
மக்களை ஜாதிகளாகப் பிரித்து தனித்தனியாக இருக்கவேண்டும் என்று சொன்னதுதான் சனாதனம். ஆனால், கலைஞர் அவர்களோ எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி அமர்த்தி அந்த இடத்திற்கு, `சமத்துவபுரம்’ என்று பெயர் வைத்து சனாதனத்திற்குச் சம்மட்டி அடி கொடுத்தவர்தான் நம்முடைய கலைஞர் அவர்கள்.
இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த சனாதனத்தின் அடிமைகள் பத்து ஆண்டுகளாக சமத்துவபுரங்களைப் பராமரிக்கவே இல்லை. நம்முடைய ஆட்சி அமைந்த இந்த இரண்டு ஆண்டுகளில் சமத்துவபுரங்களைப் பராமரிப்பதற்கு ஒரு வீட்டிற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி, அதேபோல் புதுப்பிப்பதற்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்கி, சமத்துவப்புரங்களைப் புதுப்பித்திருக்கிறார் நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய முதலமைச்சர் அவர்கள்.
நம்முடைய கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்குக் கோயில்களில் அர்ச்சகராகப் பணியாற்ற ஆணை வழங்கினார்கள். இதுதான் திராவிட மாடல்.
நான் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சராகவும்தான் நான் இந்த நேரத்திலே இங்கு வந்திருக்கிறேன். வீட்டுப் படிக்கட்டைக்கூடத் தாண்டக்கூடாது. பெண்களைச் சனாதனம் அடிமைப்படுத்தி வைத்தது. ஆனால், இன்றைக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளில் பெண்கள் கலந்து கொண்டு சாதனை படைத்து வருகிறார்கள்.
இவையெல்லாம் நமக்கு எவ்வளவு பெருமையாக இருக்கின்றது. நாம் கொண்டாடுகின்றோம். இன்றைக்குப் பெண்களில் நிறைய பேர் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக கடன் பெற்று தொழில் செய்து பொருளாதாரத்துக்கு கணவனை எதிர்பார்க்காத ஒரு நிலைமையில் இருக்கின்றார்கள்.
பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது. கணவனை இழந்த பெண்களை நெருப்பில் தள்ளி, உடன்கட்டை ஏற வைத்தது. கைம்பெண்களுக்கு மொட்டை போட்டு வெள்ளைப் புடவை கட்ட வைத்ததுதான் சனாதனம். குழந்தைத் திருமணங்கள் நடந்தன. இதுதான் பெண்களுக்கு சனாதனம் செய்தது. ஆனால், பெண்களுக்கு திராவிடம் என்ன செய்தது? பெண்களுக்குக் கட்டணம் இல்லா பேருந்து வசதியை செய்து கொடுத்தது. கல்லூரியில் படிக்கின்ற பெண்களுக்குப் புதுமைப்பெண் திட்டம் மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை.
வருகிற, செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்தநாளில் பெண்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய ’கலைஞர் பெண்கள் உரிமை திட்டம்’. மக்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களைத் திராவிட மாடல் அரசு நிறைவேற்றுகின்றது. ஒன்றிய அரசு மக்களைப் பின்னோக்கி, பின்னால் தள்ள பார்க்கின்றது.