Thiruvannamalai | உலகப்புகழ் பெற்ற சாத்தனூர் அணையில் முதலைகளின் நிலை என்ன? வனத்துறை அதிகாரி விளக்கம்..!
கொரோனா வைரஸ் காலத்திலும் தங்குதடையின்றி சாத்தனூர் அணையில் உள்ள முதலைகளுக்கு சரியான முறையில் உணவு வழங்கப்படுவதாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் அணை- தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1957-ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அணை 119 அடி உயரம் கொண்டதாகும். நீர்பிடிப்பு பகுதிகளில் முதலை பெருக்கத்தை அதிகரிக்க தமிழக அரசு சார்பில் 1977-ஆம் ஆண்டு சாத்தனூர் அணையில் வனத்துறை சார்பில் முதலைப் பண்ணை தொடங்கப்பட்டது. இந்த முதலைப் பண்ணை ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய முதலைப்பண்ணை ஆகும்.
இந்த பண்ணையில் 135 பெண் முதலைகளும், 217 ஆண் முதலைகள் என 352 முதலைகள் உள்ளன. இந்த முதலைகளை 30 சிறிய பெரிய தொட்டிகள் அமைத்து வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். முதலைகளுக்கு உணவாக திங்கள் மற்றும் வியாழக்கிழமை மாட்டு இறைச்சியும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் மீன்களும் வழங்கப்படுகிறது. இதற்கான தொகை வனத்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. முதலைப்பண்ணையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளிடம் 25 ஆண்டுகளாக 50 காசு மட்டுமே வசூலிக்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறுவர்களுக்கு 5 ரூபாயும், பெரியவர்களுக்கு 10 ரூபாயும், வெளிநாட்டு நபர்களுக்கு 100 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சாத்தனூர் முதலைப்பண்ணை பற்றி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் பகுதியில் உள்ள சாத்தனூர் அணையில் உள்ள முதலைப்பண்ணையில் முதலைகளுக்கு தினந்தோறும் வழங்கப்படும் இறைச்சிகளை, சரியான முறையில் வழங்காமல் அதற்கு உரியான ரூபாயினை அங்கு பராமரிக்கும் அதிகரிகள் எடுத்து கொள்வதாகவும், முதலைகளுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு விதவிதமான இறைச்சியை வழங்க வேண்டும். ஆனால் மாட்டு இறைச்சியை மட்டும் முதலைகளுக்கு வழங்குவதாக தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று காலகட்டத்தில் முதலைகளுக்கு சரியான முறையில் உணவு வழங்கப்படுகிறதா என முதலைப்பண்ணை பாதுகாப்பு வன அதிகாரி புருஷோத்தமனிடம் தொலைபேசியில் கேட்டபோது, ”கொரோனா வைரஸ் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை சாத்தனூர் அணையில் உள்ள முதலைகளுக்கு தங்குதடையின்றி உணவு வழங்கப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் சாத்தனூர் அணையில் மீன் வழங்கப்படுகிறது. திங்கள் மற்றும் வியாழக்கிழமை அன்று முதலைகளுக்கு வழங்கும் மாட்டு இறைச்சியை எடுத்துவரும் வாகனத்தை போலீசார் தடை செய்யாதவாறு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சாத்தனூர் அணையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்காமல் அணை பூட்டப்பட்டுள்ளது.
முதலைகளுக்கு உணவளிக்கும் வாகனங்களை தடைசெய்யக்கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வனத்துறை சார்பில் கடிதமும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலைகளுக்கு மாமிசம் எடுத்துவரும் வாகனத்தில் வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் மாவட்ட வன அதிகாரி அவர்களின் ஆலோசனையின்படி முதலைப்பண்ணை சரியான முறையில் பராமரித்து பாதுகாத்து வருகிறோம். முதலைப் பண்ணையில் உள்ள அனைத்து தொட்டிகளும் குளோரின் பவுடர், பினாயில் தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. முதலைகளுக்கு சரியான தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முதலைக்கும் 500 கிராம் என எடைவைத்து, அதன் பிறகே வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக முதலைப் பண்ணை மூடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.