இனி, இதை செய்யவேக் கூடாது! தவெக நிர்வாகிகளுக்கு கட்டளையிட்ட விஜய்.. என்ன மேட்டர்?
தவெக கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததில் 70 வயது முதியவர் படுகாயம் அடைந்தார்.

சென்னை வில்லிவாக்கத்தில் தவெக கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததில் 70 வயது முதியவர் படுகாயம் அடைந்த நிலையில், இனி பொது இடங்களில் பேனர் வைக்கக் கூடாது என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அவரது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தவெக நிர்வாகிகளுக்கு கட்டளை:
இதுகுறித்து புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரின் உத்தரவு மற்றும் அன்புக் கட்டளையின்படி கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும், உரிய அனுமதியுடன், மிகுந்த கண்ணியத்துடன் கட்டுப்பாடுடன் இருப்பதை கழக நிர்வாகிகள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.
இதுவரை, எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கும். போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ, விளம்பரப் பதாகைகளோ கழகம் சார்பில் வைக்கப்படவில்லை. நம் வெற்றித் தலைவரின் பேனர்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் வைப்பதை விரும்புவதோ ஊக்கப்படுத்துவதோ இல்லை.
எனவே, கழகத் தலைவர் அவர்களின் உத்தரவை மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர். கிளைக்கழகம் மற்றும் சார்பு அணிகள் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிலையிலான அமைப்புகளும் மிகவும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
என்ன சொன்னார் விஜய்?
குறிப்பாக, நகரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலையோரங்களிலும் கழகத்தின் சார்பில் பேனர்கள் எந்த காரணத்திற்காகவும் அறவே வைக்கக் கூடாது.
இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும், காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிந்து, கழக வழக்கறிஞர்கள் அணியின் உதவியுடன் செயல்பட வேண்டும் என்று கழக நிர்வாகிகள், தோழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
கொடிக்கம்பங்களுக்கு கட்டுப்பாடு:
தமிழ்நாட்டில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
வரும் ஜூலை 2ம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டி வரும் என்றும் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது. சாலையின் நடுவில் அமைந்துள்ள தடுப்புகளில் கொடிக்கம்பங்கள் நடக்க கூடாது என்றும் தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க: Minister Moorthy : ’சிறுவன் கடத்தல் வழக்கில் அமைச்சர் மூர்த்திக்கு தொடர்பு?’ செல்போன் எண்ணை மாற்றுவது ஏன்?





















