Minister Moorthy : ’சிறுவன் கடத்தல் வழக்கில் அமைச்சர் மூர்த்திக்கு தொடர்பு?’ செல்போன் எண்ணை மாற்றுவது ஏன்?
தன்னுடைய தொடர்பு எண்ணை அமைச்சர் மூர்த்தி மாற்றி வருவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், ஒரு மக்கள் பிரதிநிதி, அதுவும் அமைச்சர் இப்படி செல்போன் எண்ணை தொடர்ந்து மாற்றி வருவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது

காதல் திருமண விவகாரம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டு, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழக பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்திக்கும் இந்த கடத்தல் வழக்கில் தொடர்பு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது. ஏற்கனவே, தீவிர விசாரணை வளையத்தில், அதிமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏவான பூவை ஜெகன் மூர்த்தி உள்ள நிலையில், திமுக அமைச்சர் மூர்த்தியின் பங்கு இதில் எப்படி வந்தது என்று எல்லோருக்குமே வியப்பாக இருந்தது.
ஓபிஎஸ்-க்காக பேசினாரா மூர்த்தி ?
காதல் திருமண விவகாரத்தில் பெண்ணின் தந்தை தேனி மாவட்டத்தை சேர்ந்த வனராஜ் என்பவர் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான நபராக அறியப்படுபவர். அவர் தன்னுடைய பெண் விவகாரம் தொடர்பாக ஒபிஎஸ்-சை நாடி உதவி கேட்டதாகவும், ஒபிஎஸ் தன்னுடைய நண்பரான திமுக அமைச்சர் மூர்த்தியிடம் இது பற்றி பேசி, உதவி செய்யும்படி கேட்டதாகவும் கூறப்பட்டது. அதன்படி அமைச்சர் மூர்த்தி திருவள்ளூர் மாவட்ட காவல் அதிகாரிகளிடம் பேசியதாகவும், பெண்ணின் தந்தைக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று கூறியதாகவும் வெளியான தகவல் காட்டுத் தீபோல் திமுகவிலும் பரவியது.
திமுக அமைச்சர் மூர்த்தி ஏன் இதில் தலையிட வேண்டும் ? அவருக்கும் திருவள்ளூர் மாவட்டத்திற்கும் என்ன தொடர்பு ? அதுவும் ஒபிஎஸ், பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் அதிமுகவுடன் நெருக்கமாக இருப்பவர்கள். இவர்களுக்கு ஏன் மூர்த்தி உதவ வேண்டும் என்று கேள்வி மேல், கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது.
அதிமுகவினர் மீது மூர்த்திக்கு பாசம் ?
அதே நேரத்தில் ஒ.பன்னீர்செல்வத்துடனும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடனும் அமைச்சர் மூர்த்திக்கு நல்ல பழக்கம் இருப்பதாகவும், அவர்களுக்காக பல விஷயங்களை மூர்த்தி செய்துக்கொடுப்பதாகவும், மதுரையில் கூட செல்லூர் ராஜூக்காக பல நேரங்களில் மூர்த்தி விட்டுக்கொடுத்து சென்றிருக்கிறார் என்றும் மதுரை உடன்பிறப்புகளே கூறுகின்றனர்.
அமைச்சர் தரப்பு மறுப்பு – செல்போன் எண்ணை மாற்றிக்கொண்டே இருக்கும் மூர்த்தி
இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க அமைச்சர் மூர்த்தியை தொடர்புகொள்ள முயற்சித்தோம். ஆனால், அவரது தொலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. விசாரித்து பார்த்ததில், அவர் வேறு ஒரு புது எண்ணை உபயோகிக்கிறார் என தெரிந்து, அதனையும் பெற்று தொடர்புகொண்டபோது அதுவும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் விசாரித்ததில், அந்த எண்ணை மாற்றிவிட்டு இன்னொரு எண்ணை அமைச்சர் பயன்படுத்துகிறார் என தெரியவந்தது. அந்த எண்ணை பெற முயற்சி, முடியாத நிலையில், அமைச்சரின் உதவியாளர் முருகேசனை தொடர்புகொண்டு பேசினோம்.
அப்போது அவர் ‘அமைச்சர் மூர்த்தி சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் போலீஸ் உள்ளிட்டோரிடம் பேசிதாக கூறப்படுவது பொய் என்றும், அமைச்சர் மதுரை மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட பேச மாட்டார். போலீஸ் விவகாரங்களில் தலையிட மாட்டார், அவர் எப்படி திருவள்ளூருக்கு பேசியிருக்க முடியும்? என்று கேட்டதோடு, இது அமைச்சர் மீது பழி போடுவதற்காக யாரோ திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு என்று கூறியதோடு, தான் அமைச்சரோடு 15 வருடமாக இருக்கிறேன் என்றும் அவர் இந்த விவகாரத்தில் தலையிடவே இல்லை என்றும் கூறி’ முடித்துக்கொண்டார்.
இருப்பினும் ஒரு மக்கள் பிரதிநியாக இருப்பவர் இப்படி தொடர்ந்து தன்னுடைய தொடர்பு எண்ணை மாற்றிக்கொண்டே இருப்பது அவரின் செயல்பாடுகளில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், அவரை தொடர்புகொள்ள வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் நினைத்தால் கூட உடனடியாக பேச முடியவில்லை என்றும் மதுரை திமுகவினரே பேசிக்கொள்கின்றனர்.
திருவள்ளூர் எஸ்.பி. திட்டவட்ட மறுப்பு
கடத்தல் விவகாரத்தில் அமைச்சர் மூர்த்தி திருவள்ளுர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீனிவாச பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசியதாக கூறப்படும் தகவலுக்கு திட்டவட்ட மறுப்பு தெரிவித்துள்ளார். வழக்கு சட்டத்தின்படியே விசாரிக்கப்பட்டது என்றும் தன்னிடம் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட யாரும் பேசவில்லையென்றும் மறுப்பு தெரிவித்துள்ள எஸ்.பி. ஸ்ரீனிவாச பெருமாள், தான் எப்படிப்பட்ட அதிகாரி என்பதும் வழக்குகளை எப்படி சட்டத்தின்படி விசாரிப்பேன் என்பதும் வடக்கு மண்டல் ஐ.ஜி. அஸ்ரா கார்க் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும் என்றும், இதுபோன்ற செய்திகள் எல்லாம் வேலையற்றவர்கள் செய்வது என்றும் கூறியுள்ளார்.
பல வருடமாக மேலூரை கைப்பற்ற முடியாமல் மூர்த்தி திணறல்
இந்நிலையில், மதுரை மாவட்ட திமுகவினரிடம் அமைச்சர் மூர்த்தியின் செயல்பாடுகள் குறித்து விசாரித்தப்போது, மதுரைக்கு தான் ஒரு முடிசூடா மன்னன் என்பது போன்று அவர் நடந்துக்கொள்வதாகவும், கட்சி தலைமைக்கு தெரிவதற்காக மட்டுமே தாட், பூட் என்று அவர் நடவடிக்கைகள் இருக்கும் என்றும், உண்மையிலேயே அவர் சிறப்பாக செயல்பட்டால் திமுக ஏன் மதுரை மேலூர் தொகுதியை அதிமுகவிடமிருந்து கைப்பற்ற முடியால் திணறபோகிறது? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், மதுரையில் தன்னைத் தாண்டி யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதை மூர்த்தி உறுதியாக இருப்பதாகவும் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனை இதுநாள் வரை ஓரங்க்கட்டி வந்த மூர்த்தி, இப்போது அவரின் செயல்பாடுகள் கட்சி தலைமைக்கு திருப்தி அளிப்பது தெரிந்து அவரை அணைத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.
செல்லூர் ராஜூவிடமிருந்து மதுரை மேற்கு திமுகவிற்கு வருமா ?
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி இணக்கம் காட்டி வருவதால் வரும் 2026 தேர்தலிலும் மதுரை மேற்கு தொகுதியை மீண்டும் திமுக கோட்டைவிடலாம் என்கிறனர் உடன்பிறப்புகள்.
மூர்த்தி சொல்வதை மட்டுமே கேட்கிறாரா ஆட்சியர் சங்கீதா ?
மதுரை மாவட்டத்தில் இன்னொரு அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். அதுமட்டுகின்றி மதுரை மாநகருக்கு கோ.தளபதியும் மதுரை தெற்கிற்கு மணிமாறனும் திமுக மாவட்ட செயலாளராக உள்ளனர். ஆனால், மாவட்ட ஆட்சியராக இருக்கும் சங்கீதா, அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர்கள்போல் செயல்படுவதாகவும் மற்ற திமுக நிர்வாகிகள் சொல்லும் குறை, நிறைகளை காது கொடுத்துக் கூட கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டும் அங்கு நிலவி வருகிறது.

ஒருமையில் பேசும் மூர்த்தி ?
தன்னுடைய ஆதரவாளர்கள் அல்லாத திமுகவினரை சகட்டு மேனிக்கு அமைச்சர் மூர்த்தி ஒருமையில் பேசுவதாகவும், தொகுதிக்கு கள பணிக்கு செல்லும் பல்வேறு அணி நிர்வாகிகளை மதித்து, அவர்களை பயன்படுத்திக்கொள்ளாமல் அவர்களை திட்டுவதையே தன்னுடைய முழு நேர பணியாக அமைச்சர் மூர்த்தி கொண்டிருப்பதாகவும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சில மாதங்களுக்கு முன்னர் கூட தன்னை பற்றி செய்தி பதிவு செய்த ஒரு புலனாய்வு பத்திரிகை செய்தியாளரை தொடர்புகொண்ட அமைச்சர் மூர்த்தி, அவரையும் ஒருமையில் பேசியிருக்கிறார். அதனை ரெக்கார்ட் செய்த அந்த செய்தியாளர், தன்னுடைய அலுவலக தலைமைக்கு அந்த பதிவை அனுப்பியிருக்கிறார். பின்னர் ஏற்பட்ட சமரச முயற்சியில் அந்த ஆடியோ இதுவரை வெளிவராமல் தடுக்கப்பட்டிருப்பதாகவும் ஒருவேளை அந்த ஆடியோ வெளியானால் மூர்த்தியின் உண்மையான முகம் வெளிவரும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.





















