TVK Maanadu: தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலுக்கு எப்படி வருவது?
மாநாடு அன்று காலை 10 மணிக்கு மேல் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பேருந்தில் பயணத்தில் வந்து மாநாடு பார்ப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர்.
இதையடுத்து, கடந்த ஆக.27-ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், மாநாடு நடத்துவதற்கு அனுமதி கோரி மனு அளித்தார். ஆனாலும், காவல்துறை அனுமதி வழங்குவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. குறிப்பாக, மாநாடு தொடர்பாக 21 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு காவல் துறை கூறியது. அதற்கு கட்சி சார்பாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், மாநாடு நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் 85 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகளில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடிகர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என ஒற்றை குறிக்கோளுடன் நகர்ந்து வருவதாக தெரிகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் கண்காணித்து வருகிறார்.
மாநாடு திடலுக்கு வருவது எப்படி?
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இருந்து சென்னை நோக்கி 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வி.சாலை கிராமம். மாநாடு நடைபெறும் இடம் வி.சாலை பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே அமைந்துள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை அடைந்த பின்னர், அங்கிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்து மூலம் ஐந்து நிமிடத்தில் மாநாட்டு திடலுக்கு வந்துவிடலாம். அதேபோல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வருபவர்கள் தனது சொந்த வாகனத்தில் வருபவர்கள் நேரடியாக மாநாடு திடலின் அருகே உள்ள பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திவிட்டு மாநாட்டு திடலுக்கு வரலாம், பேருந்தில் வருபவர்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இறங்கி மாற்று பேருந்து மூலம் மாநாட்டு திடலுக்கு வர வேண்டிய நிலை இருக்கிறது.
போக்குவரத்து மாற்றம்
குறிப்பாக மாநாட்டு திடலின் அருகே போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பேருந்து மூலம் வரும் நிர்வாகிகள் முன்னதாகவே மாநாட்டிற்கு வந்தால் மாநாட்டில் பங்கு கொள்ள ஏதுவாக இருக்கும். ஏனென்றால் காலை 10 மணிக்கு மேல் போக்குவரத்து மாற்றம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பேருந்தில் பயணத்தில் வந்து மாநாடு பார்ப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
கார், வேன், பஸ், இருசக்கர வாகனம் மூலம் மாநாட்டிற்கு வருபவர்கள் வாகனம் நிறுத்துவதற்கு ஏதுவாக ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாநாட்டு திடலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் பார்க்கிங் இடம் உள்ளது. அதேபோல் திண்டிவனம் மார்க்கமாக வரும் வாகனங்கள் சித்தனி அருகே உள்ள உணவகம் பகுதியில் பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மார்க்கமாக வரும் வாகனங்கள் கீழகொந்தகை பகுதி மற்றும் வி.சாலை அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.