Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
ரஜினிகாந்த்திற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவிக்காததால் ரஜினி ரசிகர்கள் விஜய்யை இணையத்தில் வசைபாடி வருகின்றனர்.

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது 75வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பிரபலமான நபராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு நிகரான புகழ் கொண்டவராக திகழ்பவர் ரஜினிகாந்த்.
ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்:
பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என இந்தியாவின் பிரபலமான பல அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமான நட்பு கொண்டவர். ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் தவெக தலைவரும், தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமானவருமான விஜய் வாழ்த்து கூறவில்லை. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
விஜய் கட்சி தொடங்கிய முதல் ஆண்டான கடந்தாண்டு ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு காலையிலே வாழ்த்து கூறினார். ஆனால், இந்தாண்டு அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதன்பின்பு, சில அரசியல் காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
என்ன காரணம்?
தன்னுடைய ஆரம்ப கால படங்களில் விஜய் தன்னை ரஜினி ரசிகராக காட்டி பல படங்களில் நடித்துள்ளார். அண்ணாமலை தம்பி இங்கு ஆட வந்தேன்டா என்று ரஜினிக்கு அடுத்தபடியாக தான் என்றும் காட்டிக்கொண்டார். பின்னர், அவரது அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் மிகப்பெரிய அளவு வளர்ச்சி அடைந்ததும் சூப்பர்ஸ்டார் பட்டம் தொடர்பான போட்டியால் ரஜினி ரசிகர்களுடன் விஜய் ரசிகர்கள் இணையத்தில் மோதினர்.
பின்னர், கட்சி தொடங்கும் முன்பே ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினிதான் என விஜய் மேடையிலே கூறினார். இந்த சூழலில், விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு திமுக-வுடன் நெருக்கமாக இருக்கும் ரஜினிகாந்த் மேலும் நெருக்கமாகத் தொடங்கினார். குறிப்பாக, கரூர் சம்பவத்திலும் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.
விஜய் - ரஜினி ரசிகர்கள் மோதல்:
மு.க.ஸ்டாலினுடனும், திமுக-வுடனும் ரஜினிகாந்த் நெருக்கமான உறவு கொண்டாடி வருவதன் காரணமாகவே விஜய் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காததைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் விஜய்யை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர்கள் ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித். கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் தொடங்கிய பிறகு தற்போது அவரது அரசியல் செயல்பாடுகள் காரணமாக அவர் மீதான எதிர்பார்ப்பு பெருமளவு குறைந்துவிட்டது. விஜய்க்கு வரும் சட்டமன்ற தேர்தலில் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களின் வாக்குகள் மிகவும் அவசியமானதாக உள்ளது. இதனால், செல்லுமிடம் எல்லாம் விஜய் ரசிகர்கள் விஜய் - அஜித் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பேனராக வைத்து வருகின்றனர்.
என்ன செய்யப்போகிறார் விஜய்?
அதேசமயம், காகா - கழுகு கதை, சூப்பர்ஸ்டார் பட்டம் பஞ்சாயத்து உள்ளிட்ட பல காரணங்களால் விஜய் ரசிகர்கள் - ரஜினி ரசிகர்கள் மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ரசிகர்களின் வாக்குகளை கவர்வதற்கு விஜய் என்ன செயயப்போகிறார்? திரையுலகில் இருந்து விஜய்க்கு இதுவரை எந்தவொரு வெளிப்படையான ஆதரவும் வராத நிலையில், திரையுலகினரை ஆதரவை விஜய் எப்படி பெறப்போகிறார்? என்பதும் அவருக்கு மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது.





















