விஜய் போட்டியிடும் தொகுதி ரகசியம் உடைந்தது! திருச்சி, குன்னம், மதுரை: எந்த தொகுதியில் களமிறங்குவார்?
"தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன"

தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருக்கக்கூடிய விஜய் இன்று தனது பிரச்சார பயணத்தை மேற்கொள்கிறார். ஏற்கனவே, திருச்சியில் இருந்து பல்வேறு கட்சிகள் அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கும் நிலையில், விஜயும் தனது பிரச்சார பயணத்தை திருச்சியில் தொடங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
விஜயின் மக்கள் சந்திப்பு பயண திட்டம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது மாநிலம் தழுவிய மாவட்ட வாரியான மக்கள் சந்திப்பு பயணத்தை இன்று தொடங்குகிறார். திருச்சியில் இன்று தொடங்கும் இந்த சுற்றுப்பயணமானது, ஒவ்வொரு சனிக்கிழமையும் திட்டமிடப்பட்டு டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட லோகோவில், ”உங்க விஜய் நான் வரேன், வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
திருச்சியில் விஜய் பயணத்தை தொடங்க என்ன காரணம்?
விஜய் தனது கட்சியை தொடங்கிய பிறகு முதல் மாநாட்டை வடக்கு மண்டலத்தை மையமாக வைத்து, விக்கிரவாண்டி அருகே கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை, கோவையில் நடத்தினார். இதேபோன்று காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக சென்னையில், போராட்டத்தை நடத்தினார். தொடர்ந்து தென் மாவட்டங்களை மையமாக வைத்து மதுரையில், கட்சியின் இரண்டாவது அரசியல் மாநாட்டை நடத்தினர்.
இந்தநிலையில் தான் டெல்டா பகுதிகளை மையமாக வைத்து, மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை இன்று முதல் தொடங்க இருக்கிறார். இதன்மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 மண்டலங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை நிர்வாகிகளுக்கு உணர்த்துவதற்காகவே, இவ்வாறு பயணத்தை திட்டமிடுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் போட்டியிடப் போகும் தொகுதிகள் என்ன ?
தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில், விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் எழுந்திருக்கிறது. எப்போதுமே ஸ்டார் அந்தஸ்து பெற்றவர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு தனி கவனம் பெறுவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் பேசுகையில், கட்சியின் கட்டமைப்பு எந்த தொகுதிகளில், வலுவாக இருக்கிறதோ அந்த தொகுதியில் போட்டியிட விஜய் முடிவு செய்திருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். விஜயின் இந்த மக்கள் சந்திப்பு பயணத்தை அடிப்படையாக வைத்தே, எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை நாம் உறுதி செய்து விடலாம் என தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது, விஜய் முதல் நாள் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கி இருக்கிறார். குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தொகுதியிலும் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். அதேபோன்று தனது பிரச்சாரத்தை மதுரையில் முடிக்கிறார். ஒரு கட்சியின் பிரச்சாரம் துவங்கும் இடமும், முடியும் இடமும் முக்கிய தொகுதிகள் என பார்க்கப்படும். அந்த வகையில் திருச்சி, குன்னம் மற்றும் மதுரை ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் விஜய் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





















