Sivagalai Excavation: சிவகளை அகழாய்வில் சங்க கால செங்கல் கட்டுமான அமைப்பு கண்டுபிடிப்பு..!
சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீமூலக்கரையில் இதுவரை 35 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் தமிழக தொல்லியல் துறை சார்பாக கடந்த 2 ஆண்டுகளாக இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அகழாய்வு பணியில் ஏராளமான பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற 2-ம் கட்ட அகழாய்வு பணியின் போது பரம்பு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட பொருட்களும், வாழ்விடப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பொருட்களும், 48 முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
குழந்தைகள் விளையாடும் வட்ட சில்கள், பெண்கள் அணியும் காதணிகள், சதுரங்க காய்கள், நூல் நூற்கப் பயன்படும் தக்களி, சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரைகள், சுடுமண் பந்து, சுடுமண் சக்கரம், நுண்கற்கால கருவிகள், பட்டை தீட்டும் கற்கள், எலும்புகளால் ஆன கூர்முனைக் கருவிகள், அம்மி குழவி, கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள், பாசிமணிகள், சீன நாட்டு நாணயம், காப்பர் குழாய், சீன பானை ஓடுகள், வாள், கத்தி என ஏராளமான பொருட்கள் கிடைத்தன. வாரங்காடு திரட்டில் சுடாத செங்கல்லால் அமைக்கப்பட்ட கட்டுமானம், பராக்கிரமபாண்டி திரட்டில் செங்கல்லால் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் என பல முக்கியத்துவம் வாய்ந்த தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நிலையில் இந்தாண்டு கடந்த மார்ச் மாத இறுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வு பணிகள் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இதற்காக சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீ மூலக்கரை பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தையும், ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல்கோட்டை திரடு பகுதியில் முன்னோர்களின் வாழ்விடப்பகுதிகளை கண்டறியவும் இந்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தற்போது வரை 18 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
இதில் சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீமூலக்கரையில் இதுவரை 35 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்த ஆய்வுப்பணியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டசில்கள், தக்களி சாதனம், புகைப்பான், ஆட்டக்காய்கள், பாசி மணிகள் வளையல் துண்டுகள், காதணிகள், எலும்பால் செய்யப்பட்ட கூர்முனைக்கருவிகள், முத்திரைகள் உள்பட 80 தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே பகுதியில் நடந்த அகழாய்வு பணியில் இதே போல் செங்கல் கட்டுமான அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அறிக்கை சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்த போது, இந்த செங்கல்கட்டுமானத்தில் நன்னீர் பாய்ந்தோடியதற்கான அடையாளம் இருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.