5 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் இல்லையா? வதந்திகளை பரப்பாதீர்கள் - அமைச்சர் விளக்கம்!
அனைத்து விதமான வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து இறக்கலாம் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டி போராட்டம் செய்த நிலையில், போக்குவரத்து துறை சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது முதலே தொடர்ந்து பிரச்சினைகளையும், சலசலப்பை கொண்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கே போதிய பேருந்துகள் வசதி இல்லை. மின்சார ரயில்களில் சென்றாலும் ஊரப்பாக்கம் அல்லது பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி நீண்ட நேரம் நடந்தோ அல்லது ஆட்டோவில் செல்ல வேண்டியது உள்ளது. அப்படியே ஆட்டோவில் சென்றாலும் அதிக அளவு பணம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை பயணிகள் முன்வைத்தனர்.
#WATCH | Tamil Nadu: People staged a protest at Kilambakkam bus terminus in Chennai, complaining about inadequate bus service towards South Districts. (10.02) pic.twitter.com/j9tGGiQgrd
— ANI (@ANI) February 11, 2024
இதையடுத்து, அனைத்து விதமான வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து இறக்கலாம் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இப்படியான சூழலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போதுமான பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இல்லை என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்திய நிகழ்வும் நடைபெற்று வருகிறது.
போதிய பேருந்து வசதிகள் இல்லை:
இந்தநிலையில், நேற்றும் (பிப்ரவரி 11) நள்ளிரவு 01.00 அளவில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் திடீரென அதிகரித்த காரணத்தினால் வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. பேருந்துகள் கிடைக்காமல் 5 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்தில் காத்திருப்பதாக பயணிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு சாலையில் திரண்டனர்.
அரசு போக்குவரத்து கழக அலுவலர்களும், காவல்துறையினரும் பயணிகளிடம் உரிய பேருந்துகள் பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்படுகின்றது என்று சமாதானம் செய்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து பின்னர், இயல்பு நிலைக்கு திரும்பியது.
இது குறித்து போக்குவரத்து கழகங்களின் சார்பில் விளக்கம அளிக்கப்பட்டுள்ளது. அவை, ”10.02.2024 அன்று அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் சார்பாக 350 பேருந்துகளும், அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் சார்பாக 201 பேருந்துகளும், அரசு போக்குவரத்து கழகம், சேலம் சார்பாக 15 பேருந்துகளும், மேலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக திருவண்ணாமலைக்கு 23 பேருந்துகள் இயக்கப்பட்டன ஆக மொத்தம் தினசரி இயக்கக்கூடிய 1,124 பேருந்துகளுடன், 612( திருவண்ணாமலைக்கு 150 பேருந்துகள்) சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படுகின்ற பேருந்துகளை விட நேற்றைய தினம் அதிக அளவில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட காரணத்தினால் வழக்கம் போல (வார இறுதி நாட்களில்) அதிகாலை 3.30 மணியளவில் பயணிகள் அனைவர்களும் முழுமையாக அவர்தம் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் இப்பேருந்துகள் இயக்கத்தின் வாயிலாக, நேற்றைய தினம் (10.02.2024) மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 1,07,632 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.” என தெரிவித்தனர்.
அமைச்சர் விளக்கம்:
இந்தநிலையில், கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்தார். அதில், “அரசுப்பேருந்து குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற நோக்கில் சிலர் உள்நோக்கத்தோடு இதனை செய்து வருகின்றனர். முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் விரைவில் செயல்பாட்டிற்கு வந்த பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும். வதந்திகளை பரப்ப வேண்டாம்” என தெரிவித்தார்.