Traffic Diversion: மெரினா கடற்கரைக்கு செல்வோர் கவனத்திற்கு.. வேகமெடுக்கும் மெட்ரோ பணிகள்.. ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்..!
சென்னை மெரினா கடற்கரை சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக நாளை முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக நாளை முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை இணைக்கும் மெட்ரோ ரயில் சேவை
சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நிறைந்த நேரத்தில் அதிகப்படியான உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மழை காலங்களில் பயணம் மேற்கொள்ள மெட்ரோ ரயில்கள் மிகவும் சிறப்பாக உதவி புரிகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த மெட்ரோ ரயில் பாதையானது பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், தி.நகர். மயிலாப்பூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை இணைக்கப்பட உள்ளது. இதற்காக பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நாளை முதல் (ஜூலை 6) அடுத்தாண்டு ஜூலை 6 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கலங்கரை விளக்கம் பகுதியின் காந்தி சிலைக்கு பின்புறம் உள்ள மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,
- லூப் ரோடு மற்றும் காமராஜர் சாலையிலிலிருந்து வரும் வாகனங்கள் கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக போர் நினைவுச் சின்னம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டு, காமராஜர் சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.
- அதேபோல், மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக போர் நினைவு சின்னத்திலிருந்து கலங்கரை விளக்கம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களும் காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
- மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்குப் பின்னால் தடை செய்யப்பட்ட பகுதி வரை செல்ல முடியும். அதன்பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் யூ-டர்ன் செய்து கலங்கரை விளக்கம் வந்தடைந்து, வலதுபுறம் திரும்பி காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
- மேலும், போர் நினைவுச் சின்னத்திலிருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்குப் பின்னால் உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வரை சென்று பின்னர், யூ-டர்ன் செய்து இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை வழியாக காமராஜர் சாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம். இந்த முடிவுக்கு பொதுமக்கள் சிரமம் கருதாது ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.