AIADMK Meeting: நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு.. கூட்டணி குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம்..
நாளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு மற்றும் பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது.
![AIADMK Meeting: நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு.. கூட்டணி குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம்.. Tomorrow december 26 AIADMK general secretary Edappadi Palaniswami will hold the executive committee and general meeting in Chennai AIADMK Meeting: நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு.. கூட்டணி குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/25/0c142a0cc6a1a2692a6c9f4665329e371703495415246589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாளை டிசம்பர் 26 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறுகிறது. இந்த கூட்டம் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. நாளை நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டம் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களின் பெரும்பான்மையுடன் நடைபெறும் என்பதால் எந்தவித சண்டை, சச்சரவுகளும் இல்லாமல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும், பா.ஜ.க.வுடனா கூட்டணி முறிவுக்கு பிறகு பொதுத்தேர்தலை சந்திக்க இருப்பது குறித்தும், உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துதல் குறித்தும், தேர்தல் பரப்புரைகள், தேர்தல் பணிகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களையும் கைப்பற்றுவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, நாளை அந்த பகுதியில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தது. குறிப்பாக ஓபிஎஸ் பிறிந்து சென்று தர்ம யுத்தம் நடத்தியது, ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பினருக்கு மோதல் ஏற்பட்டது, பின் எடப்பாடி பழனிசாமியால் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டது, ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஒன்றிணைந்தது என பல்வேறு பிரச்சனைகள் இருந்தது. கடந்த ஆண்டு நடைப்பெற்ற பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் சில கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது, உயர் நீதிமன்றம் உச்சநீதிமன்றம் என எங்கு சென்றாலும் ஓபிஎஸ்க்கு பின்னடைவு ஏற்பட்டது. கடைசியாக ஓபிஎஸ் தரப்பில் அதிமுக கட்சியின் சின்னம், கொடி என எதையும் பயன்படுத்தப்படாது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இப்படி பல சூழல்களை தாண்டி அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி கைவசம் வந்தது.
இப்படி இருக்கும் சூழலில் நாளை பொதுக்குழு நடைபெறுகிறது. முக்கியமாக பாஜக உடனான கூட்டணி முறிந்த பின் நடைப்பெறும் பொதுக்குழு கூட்டம் இதுவாகும். இந்த பொதுக்குழு அரசியல் வட்டாரங்களில் உற்று நோக்கப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன் படி, வரும் 26.12.2023 – செவ்வாய் கிழமை காலை 10.35 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேஜ் தலைமையில் நடைபெற உள்ளது.
கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)