(Source: ECI/ABP News/ABP Majha)
நீட் தேர்வு: காலம் தாழ்த்திய முதல்வர்; மாணவர்கள் படிப்புக் கேள்விக்குறி - இபிஎஸ் கண்டனம்
கல்லூரி மாணவர்களுக்கான இலவச டேட்டா கார்டை தமிழ்நாடு அரசு புதுப்பித்து கொடுக்க வேண்டும். நடப்பாண்டு புதிதாய் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா கார்டு வழங்க வேண்டும் - இபிஎஸ்
இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா? என முதலமைச்சர் ஸ்டாலினிடம் நேரடியாக பலமுறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதின் விளைவாக இன்று மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘"இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா?"என முதலமைச்சரிடம் நேரடியாகவும், ஊடகங்கள் மூலமும் பலமுறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதின் விளைவுவாக இன்று மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது.
எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத இந்த அரசு, அம்மா அரசு செயல்படுத்திய "நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கப் பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல்,தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அம்மா அரசு அளித்தது போல உரிய பயிற்சிகள் வழங்கி உறுதுணையாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
"இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா?"என மாண்புமிகு முதல்வர் அவர்களை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமும் பலமுறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதின் விளைவு; இன்று மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 13, 2021
எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத இந்த அரசு,(1/2)
முன்னதாக, செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி நாடு முழுவதும் 2021 செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும். விண்ணப்பங்களை 13ஆம் தேதி மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்’ எனப் பதிவிட்டார். கொரோனா காரணமாக நீட் தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை 155 இல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்தாண்டு இருந்த 3,862 தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் இந்த முறை அதிகரிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். கொரோனா விதிகளின் அடிப்படையில் தேர்வு எழுதவரும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு மையங்களில் முக கவசம் வழங்கப்படும் என்றும், தேர்வு நடைபெறும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறினார்.
முன்னதாக, கல்லூரி மாணவர்களுக்கான இலவச டேட்டா கார்டை தமிழ்நாடு அரசு புதுப்பித்து கொடுக்க வேண்டும் என்றும், பல மாணவர்கள் ஏழ்மை, நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள், மாதம் ரூ.400 வரை செலவு செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும், நடப்பாண்டு புதிதாய் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா கார்டு வழங்க வேண்டும் எனவும் பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.