TN Weather: தமிழ்நாட்டை சுட்டெரிக்கப்போகுது வெயில்! அடுத்த 5 நாட்கள் இப்படித்தான் இருக்கப்போகுது!
தமிழ்நாட்டில் ஓரிரு நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே மழை பரவலாக பெய்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாகவே பல இடங்களில் வெயில் வழக்கத்தை விட அதிகளவில் உள்ளது.
தமிழ்நாட்டில் சுட்டெரிக்கப்போகும் வெயில்:
தமிழ்நாட்டில் நேற்று பல இடங்களில் வெயில் 100 டிகிரியை காட்டிலும் அதிகளவில் கொளுத்தியது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வறண்ட வானிலை காரணமாக இன்று இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகரித்து காணப்படும் என்று கூறியுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் பல இடங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் 100 டிகிரியை காட்டிலும் அதிகளவில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
100 டிகிரியை கடந்து பதிவான வெப்பநிலை:
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் சென்னையில் நேற்று முன்தினம் வெயில் 102 டிகிரியாக கொளுத்தியது. சென்னையில் இன்றும் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மதுரையில் நேற்று 105 டிகிரி வெயில் வெப்பத்தால் மதுரை மக்கள் அவதிக்குள்ளாகினர். மதுரை மட்டுமின்றி தஞ்சை, நாகப்பட்டினம், சென்னையிலும் வெயில் 100 டிகிரியை கடந்து வீசியது. இந்த 3 மாவட்டங்களில் வெப்பநிலை 102 டிகிரி செல்சியசாக பதிவானது.
மிதமான மழை:
வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக பதிவாக உள்ள அதே சூழலில், மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக வரும் 22ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில் மன்னார் வளைகுடா தென் தமிழக கடலோர பகுதிகள், அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 65 கி.மீ. வேகம் வரை வீசும் என்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால் பள்ளி செல்லும் குழந்தைகள், பணிக்குச் செல்பவர்கள் அதற்கு ஏற்ப ஆயத்தமாகிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

