TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
சென்னையில் மழை பெய்து வரும் சூழலில் நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பல இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
சென்னையில் வெளுக்கும் மழை:
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
4 மாவட்டங்களில் மிக கனமழை:
இந்த 4 மாவட்டங்களில் ஏற்கனவே தொடர்ந்து மழை பரவலாக பெய்து வரும் சூழலில், இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 11ம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள அதே சூழலில், திண்டுக்கல், தேனி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி:
ஆந்திர கடலோர பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலோர பகுதியை ஒட்டி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டிருப்பதே இந்த கனமழைக்கு காரணம் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தற்போது முதல் மழை பெய்து வருகிறது. இதனால், முக்கிய நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் கடலூர் மாவட்டம் மாத்தூரில் அதிகபட்சமாக 13 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. புதுக்கோட்டையில் ஆவுடையார் கோயிலில் 12 செ,மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் நீர்நிலைகளின் கரைப்பகுதிகளை வலுப்படுத்தவும், கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் மாற்றி குடிப்பெயர வைக்கவும் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
17 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு:
இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ள நிலையில், நாளை 17 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி , மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.