TN Rain: அடித்து வெளுக்கும் கனமழை.. திணறும் விழுப்புரம் மாவட்டம்: சமாளிக்குமா மாவட்ட நிர்வாகம்?
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விடிய, விடிய மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும். இவை தொடர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் 15,16,17 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை
இந்த நிலையில் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம் என மாவட்டத்தில் முழுவதும் கனமழை பெய்து வருவதால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீன கிராமங்களில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். தொடர் கனமழை காரணமாக அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
களத்தில் அமைச்சர் பொன்முடி ஆய்வு
மேலும் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து வருகின்றனர். அமைச்சர் பொன்முடி அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் பொது மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், எவ்வித பாதிப்பும் இல்லாமல் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
உதவி எண்கள்:
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்திடும் பொருட்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும்
கட்டணமில்லா அழைப்பு எண் 1077 மற்றும் புகார் தொலைபேசி எண் 04146 - 223265 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பருவமழை பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
கட்டுப்பாட்டுக்கு அறைக்கு வரும் அழைப்புகளை பதிவு செய்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தெரிவிப்பதுடன் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றம் காவல்துறை அலுவலர்கள் 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வடகிழக்கு பருவமழை தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, நிவர்த்தி செய்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மீண்டும் புகார் தெரிவித்த நபருக்கு தெரிவித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
இடி, மின்னலுடன் கூடிய மழை
இன்று 15ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், இராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்தார்.
அக்டோபர் 16:
வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்; இராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.