Omni Bus Service: வெள்ளத்தால் திக்குமுக்காடும் தென்மாவட்டங்கள் - ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு..
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தென்மாவட்டங்களுக்கு இன்று ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று (டிசம்பர் 17) அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்து வருகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளது.
மேலும் அணைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் அனைத்து இடங்களில் வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம் இன்றும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர். ஒரே நேரத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் நீர் நிரம்பியதே வெள்ளத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் 30க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். நெல்லை பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் நீரில் மூழ்கி விட்டது.
View this post on Instagram
நெல்லை - மதுரை நெடுஞ்சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தென்மாவட்டங்களுக்கு நேற்று கிளம்பிய ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இதனால் அதில் பயணித்த பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதேசமயம் இன்று சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 சதவிகிதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று சென்னை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தேவையான அளவுக்கு ஏற்ப அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.