”தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கேட்டால்.. வெள்ளை அறிக்கையை..” - வானதி சீனிவாசன் ட்வீட்
அஇஅதிமுக அரசு கட்டணங்களை உயர்த்தாமல் இருந்ததை, தற்போது நஷ்ட கணக்கு காட்டி மின்சார மற்றும் போக்குவரத்து கட்டணங்களை உயர்த்த திமுக அரசு திட்டமா? அதிமுக கேள்வி
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கேட்டால், வெள்ளை அறிக்கையை பதிலாக கொடுக்காமல் இருந்தால் நல்லது என கோயம்பத்தூர் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் (09-08-2021) பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். கடந்த 2001-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின் போது நிதியமைச்சராக இருந்த சி.பொன்னையன், பட்ஜெட் தாக்கலின் போது நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இப்போது பட்ஜெட் தாக்கலுக்கு 4 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் வெள்ளை அறிக்கை வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் வாக்குறுதிகளை
— Vanathi Srinivasan (@VanathiBJP) August 9, 2021
நிறைவேற்ற கேட்டால் ,
வெள்ளை அறிக்கையை பதிலாக கொடுக்காமல் இருந்தால் நல்லது .@CMOTamilnadu @mkstalin
வெள்ளை அறிக்கை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், “வெள்ளை அறிக்கை தொடர்பாக ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கைகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டது. இது பலரின் உதவியால் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றாலும், இதில் ஏதாவது தவறு இருந்தால் அதற்கு நான் மட்டுமே முழு பொறுப்பு. வேறு யாரும் அதற்கு பொறுப்பல்ல. தற்போது வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை, செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின் அரசு இணையத்தில் வெளியிடப்படும். கடன் நிலை என்ன, வருமானம் எப்படி மாறியுள்ளது, செலவீனம் எப்படி மாறியுள்ளது என மூன்று உள்ளது. முக்கிய பொதுநிறுவனமான மின்வாரியம், மெட்ரோ வரியத்தின் நிலை என்ன என்பதும் இதில் உள்ளது. வருமானம் இல்லாத அரசு செலவீனத்தை குறைக்க முடியாது. வருமானம் சரிந்து போயுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இதை குறிப்பிட்டுள்ளது. வருவாய் 3.16 சதவீதம் வரை குறைந்து வருகிறது. திமுக ஆட்சியில் 2006-11 உபரி வருமானம் முதல் இரண்டு வருடம் மட்டுமே பற்றாக்குறை இருந்தது. 2011 ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 17 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது" என்று தெரிவித்தார்.
கடந்த 10 வருடங்களாக மக்கள் நலனை கருத்தில் கொண்ட அஇஅதிமுக அரசு கட்டணங்களை உயர்த்தாமல் இருந்ததை தற்போது நஷ்ட கணக்கு காட்டி மின்சார மற்றும் போக்குவரத்து கட்டணங்களை உயர்த்த திமுக அரசு திட்டமா? #வெள்ளைஅறிக்கை
— AIADMK (@AIADMKOfficial) August 9, 2021
இந்த வெள்ளை அறிக்கை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த அஇஅதிமுக, "கடந்த 10 வருடங்களாக மக்கள் நலனை கருத்தில் கொண்ட அஇஅதிமுக அரசு கட்டணங்களை உயர்த்தாமல் இருந்ததை தற்போது நஷ்ட கணக்கு காட்டி மின்சார மற்றும் போக்குவரத்து கட்டணங்களை உயர்த்த திமுக அரசு திட்டமா? என பதிவு செய்தது.
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். "வெள்ளை அறிக்கையில் எந்தவித புதிய விஷயம் . இல்லை. கடந்த திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடனுக்கு அதிமுக ஆட்சியில் வட்டி கட்டினோம். வெள்ளை அறிக்கை மூலம் மக்களை திசை திருப்புகின்றனர்" என்று தெரிவித்தார்.