Mekedatu Dam Project : மேகதாது அணை: விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்- இபிஎஸ்
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் போக்கிற்கு என்முனையளவு கூட இடம் அளிக்காமல், தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என இபிஎஸ் அறிக்கை.
![Mekedatu Dam Project : மேகதாது அணை: விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்- இபிஎஸ் TN Opposition Leader K Palaniswami Urges Tamilnadu Government To prevent Karnataka's Mekedatu Dam Project Mekedatu Dam Project : மேகதாது அணை: விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்- இபிஎஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/18/86136efb7e32ad96e3c86842217ab82e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் போக்கிற்கு என்முனையளவு கூட இடம் அளிக்காமல், தமிழ்நாட்டின் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலவைர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,"பன்மாநில நதிநீர்த் தாவாச் சட்டம் 1956-இல் பிரிவு 5(2)-இல் குறிப்பிட்டுள்ளவாறு, காவேரி நடுவர் மன்றம் இறுதி ஆணையை 5.2.2007 அன்று பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் சட்டப் போராட்டத்தினாலும், அரசு கொடுத்த அழுத்தத்தினாலும், உச்சநீதிமன்றத்தின் தலையீட்டாலும், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை 19.2.2013 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ் நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பின்படி, தமிழ் நாட்டிற்கு கர்நாடக அரசு, இரு மாநில எல்லையான பில்லிகுண்டுலுவில் 177.25 டி.எம்.சி. அடி நீர் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசின் சட்டப் போராட்டங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டது. மேலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுமையாக செயல்படுத்தவும், அதிமுக அரசு 30.11.2018 அன்று உச்சநீதிமன்றத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளின் மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டி இடைக்கால மனுவினை தாக்கல் செய்தது:
- மத்திய நீர்வளக் குழுமம் (Central Water Commission) 22.11.2018 அன்று கர்நாடகாவின் காவேரி நீரவாரி நிகம் நிறுவனத்திற்கு மேகதாது அணை கட்ட விரிவான அறிக்கை தயாரிக்க வழங்கிய அனுமதிக்கு தடை விதித்தல்;
- மத்திய நீர்வள அமைச்சகத்தின் உள்ள மத்திய நீர்வளக் குழுமத்தின் 22.11.2018-ஆம் தேதியிட்ட கடிதத்தை திரும்பப் பெறுதல்;
- கர்நாடகாவின் காவேரி நீரவாரி நிகம் நிறுவனம், மேகதாது அணைக்கான விரிவான அறிக்கை தயாரிப்பதை நிறுத்தி வைத்தல்;
- கர்நாடக அரசின் கீழ் செயல்படும் நிறுவனம் மற்றும் எந்தவொரு முகமையும், கர்நாடக எல்லைக்குள் காவேரி படுகையில் எந்தவொரு அணைக்கட்டுதல் போன்ற திட்டத்தை மேற்கொள்ளாமல், தற்போது உள்ள நிலையே தொடருதல்.
மேலும் நான், பிரதமர் அவர்களை நேரில் சந்தித்தபோது, கர்நாடக மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை அளித்ததோடு, அவ்வாறு அணை கட்டினால் நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறினேன்.
தொடர்ந்து கர்நாடக 20.6.2019 அன்று சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கக் கோரி மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தை அணுகியுள்ளதை அறிந்து, பிரதமர் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது எனவும், கர்நாடக அரசின் அறிக்கையை மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் முற்றிலும் நிராகரித்து திருப்பி அனுப்புமாறு, ஜல்சக்தி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டேன்.
பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் 1956-ன் படி, நதிநீரை தடுப்பதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, உச்சநீதிமன்றத்தில் 5.12.2018 அன்று எனது தலைமையிலான அப்போதைய தமிழ் நாடு அரசு, கர்நாடக அரசு உச்சநீதிமன்ற ஆணைகளை மீறி, மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரியதை அடுத்து:
- மத்திய நீர்வள குழுமத்தின் திட்ட மதிப்பீட்டு இயக்குனர்;
- கர்நாடக அரசின் நீர்வள ஆதாரத் துறைச் செயலாளர்;
- மற்றும் பிறர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இது சம்பந்தமான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இச்சூழ்நிலையில், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதலமைச்சரின் ஒருதலைபட்சமான அறிவிப்பிற்கு, எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து, தமிழ் நாட்டிற்கு கிடைக்கப் பெறுகின்ற காவேரி நீரை முழுமையாகப் பெறுவதற்கும், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் போக்கிற்கு என்முனையளவு கூட இடம் அளிக்காமல், தமிழ்நாட்டின் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளை முழுமையாக தொடர்ந்து எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு, எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)