25 ஆண்டுகளுக்கு பின் அதிமுக கோட்டையைத் தட்டித் தூக்கிய திமுக... கொடுத்த வேலையை பக்காவாக செய்த மகேந்திரன்
TN Local Body Election Results 2021: மகேந்திரன் சமீபத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவருக்கு தகவல் தொழில் நுட்ப பிரிவின் மாநில இணைச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
![25 ஆண்டுகளுக்கு பின் அதிமுக கோட்டையைத் தட்டித் தூக்கிய திமுக... கொடுத்த வேலையை பக்காவாக செய்த மகேந்திரன் TN Local Body Election Results 2021 DMK wins AIADMK stronghold in Pollachi Divansapudur after 25 years Dr. mahendran stays reason behind victory 25 ஆண்டுகளுக்கு பின் அதிமுக கோட்டையைத் தட்டித் தூக்கிய திமுக... கொடுத்த வேலையை பக்காவாக செய்த மகேந்திரன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/12/8a35990e14b3c9dae5c77d9fa5ca930f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த திவான்சாபுதூருக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சிக்கான இடைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ளது. 25 ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக இருந்த திவான்சாபுதூரை திமுக தன்வசமாக்கிக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இரு பதவிகளிலுமே ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. தான் முன்னிலையில் இருந்தது. தி.மு.க. அனைத்து பதவிகளிலும் 2 இலக்க எண்களில் முன்னிலை பெற்றிருக்க அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஒற்றை இலக்க எண்களிலேயே முன்னிலையில் இருந்தன. மதியம் 12 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 140 மாவட்ட பஞ்சாயத்து, கவுன்சிலர் பதவிகளில் 24 இடங்களில் தி.மு.க. முன்னிலையில் இருந்தது. அ.தி.மு.க. ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது திவான்சாபுதூர் ஊராட்சிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. திவான்சாபுதூர் ஊராட்சி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி தாலுகா ஆனைமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இது வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது. இந்த ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாகவே அதிமுகதான் வெற்றி பெற்று வந்தது. அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து, இந்த இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதும் திமுக சார்பில் கலைவாணி சிலம்பரசன் போட்டியிடடுவதாக அறிவிக்கப்பட்டது அதேபோல அதிமுக சார்பில் சரோஜினி போட்டியிட்டார். இரண்டு கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி திமுகவைச் சேர்ந்த கலைவாணி சிலம்பரசன் வெற்றிபெற்றுள்ளார். இதில் தி.மு.க வேட்பாளர் கலைவாணி சிலம்பரசன் 4372 வாக்குகளும், அதிமுக வேட்பாளார் சரோஜினி முனியன் 2075 வாக்குகளும் பெற்றனர். 105 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. திமுக வேட்பாளர் கலைவாணி சிலம்பரசன் அதிமுக வேட்பாளர் சரோஜினி முனியன் விட 2297 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். கால் நூற்றாண்டுக்கும் மேலான தனது கோட்டையை திமுக கைப்பற்றியது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெற்றிக்கு டாக்டர். மகேந்திரந்தான் காரணம் என கூறப்படுகிறது. அவர் சமீபத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவருக்கு தகவல் தொழில் நுட்ப பிரிவின் மாநில இணைச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதேபோல அவருக்கு கோவை சுற்றுவட்டார பகுதியில் நல்ல செல்வாக்கும் உள்ளது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் கவனம் செலுத்துமாறு திமுக தலைமையிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதற்காக தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகவும் அதனை பயன்படுத்திக் கொண்டார் மகேந்திரன். கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மரு.வரதராஜனுடன் இணைந்து வீடு வீடாகச்சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்த உழைப்பை தற்போது அறுவடை செய்திருக்கிறது திமுக. இதனையடுத்து மகேந்திரனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)