TN Hooch Tragedy : மெத்தேல் ஆண்டி டோட் என்ற உயிர்காக்கும் மருந்து தமிழ்நாட்டிலும் இல்லை - அன்புமணி
ஆண்டி டோட் என்ற உயிர்காக்கும் மருந்து தமிழ்நாட்டிலும் இல்லை, ஜிப்மர் மருத்துவமனையிலும் இல்லை. அந்த மருந்து இருந்திருந்தால் ஓரளவு உயிரை காப்பாற்றி இருக்கலாம் - அன்புமணி
விழுப்புரம் : ஆண்டி டோட் என்ற உயிர்காக்கும் மருந்து தமிழ்நாட்டிலும் இல்லை, ஜிப்மர் மருத்துவமனையிலும் இல்லை. அந்த மருந்து இருந்திருந்தால் ஓரளவு உயிரை காப்பாற்றி இருக்கலாம் - டாக்டர். அன்புமணி அதிர்ச்சி தகவல்..
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாலை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மரக்காணம், செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் இறந்துள்ளனர். 50 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதை அரசின் தோல்வியாக நான் பார்க்கிறேன். இதைத்தான் நாங்கள் பலமுறை தொடர்ந்து அறிக்கைகள் ட்விட்டர்கள் மூலமாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு, கள்ளச்சாராயத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசாருக்கு தெரியாமல் ஒரு சொட்டுகூட சாராயம் விற்க முடியாது. இது அனைவருக்கும் தெரியும். அதுபோல் கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியாமலும், அரசியல் கட்சியினரின் ஆதரவு இல்லாமலும் சாராயம் விற்க முடியாது. அங்கு பல ஆண்டுகளாக சாராயம் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது, வெள்ளமாக ஓடியிருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டீனிடம் பேசியிருக்கிறேன். சிகிச்சை அளிப்பதில் 2 நாட்கள் காலதாமதம், உடனே உயர் சிகிச்சை அளித்திருந்தால் இன்னும் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். இதற்கு முழு பொறுப்பு தமிழக அரசு. அரசின் தோல்வியாகவே பார்க்கிறோம். அரசு டாஸ்மாக் நிர்வாகத்தை நடத்துவதற்கு காரணம் கள்ளச்சாராய விற்பனை நடைபெறக்கூடாது, அதனால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என்று கூறிதான் டாஸ்மாக் நிர்வாகத்தை தொடங்கினார்கள். ஆனால் ஒருபுறம் கள்ளச்சாராயம் மற்றொரு புறம் அரசு சாராயம். இந்த இரண்டுக்கும் வித்தியாசம் கிடையாது. டாஸ்மாக் சாராயம் லைசென்சுடன் நடக்கிறது, கள்ளச்சாராயம் லைசென்ஸ் இல்லாமல் நடக்கிறது.
கள்ளச்சாராயத்தால் இந்த 2 நாட்களில் 16 பேர் இறந்து விட்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் அரசு விற்கிற டாஸ்மாக் சாராயத்தால் கடந்த ஓராண்டில் 5 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள். இதைப்பற்றி நாம் பேசுவது கிடையாது. எங்களது கோரிக்கை, பூரண மதுவிலக்கு, அப்படி இல்லையென்றால் படிப்படியாக பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்த வேண்டும். எந்த வகையில் பார்த்தீர்கள் என்றால் தமிழகத்தில் மது இல்லாத, மதுவை குடிக்க முடியாத ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும். ஆனால் தற்போது மீனவர்கள், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் மது இல்லாமல் வாழ முடியாது என்ற சூழலை 2 திராவிட கட்சிகளும் உருவாக்கி விட்டனர். கடந்த ஓராண்டில் டாஸ்மாக் விற்பனை ரூ.36,000 கோடி என்றும் இந்த ஆண்டு இதுவரை ரூ.45 ஆயிரம் கோடி மது விற்பனை என்று செந்தில் பாலாஜி கூறுகிறார். ரூ.9 கோடி கூடுதலாக மதுவினால் அரசுக்கு வருமானம் பெருகி இருக்கிறது. அதுபோல் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை மூன்று மடங்கு உயர்த்தி விட்டனர். இதனால் அதை வாங்குவதற்கு கட்டுப்படியாகாததால் இதுபோன்று கள்ளச்சாராயம் குடிப்பதற்கு மாறியுள்ளனர்.
மதுவிலக்கு துறை அமைச்சரின் வேலை மதுவிலக்கு. ஆனால் மதுவை திணிக்கும் வேலையில் அரசு ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. விளையாட்டுப் போட்டிகளில், திருமண மண்டபங்கள், மாநாடு இப்படி பல வகைகளில் மதுவை திணித்துக்கொண்டிருக்கிறது. 2 போலீஸ் சூப்பிரண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர், இது போதுமானது கிடையாது. மதுவிலக்கு துறை அமைச்சரை மாற்ற வேண்டும், சமூக அக்கறை இல்லாத அமைச்சர் மதுவை திணித்து இந்த தலைமுறையை நாசமாக்கி விட்டார். அடுத்த தலைமுறைக்கான 10 வயது 12 வயது தலைமுறையினரை காப்பாற்ற வேண்டும். இந்த தலைமுறையினருக்கு மதுவை திணித்து நாசமாக்கி விட்டனர். இது சாபக்கேடானது, வெட்கக்கேடானது. தமிழக அரசு மதுவை திணிக்கக்கூடாது.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றார். கடந்த 2 ஆண்டுகளில் மதுவிலக்கு சம்பந்தமாக என்ன செய்தீர்கள், இனி என்ன செய்யப் போகிறீர்கள், 500 கடைகள் மூடப்படும் என்கிறார்கள், அது எப்போது என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை. உண்மையிலேயே உங்களுக்கு மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் உணர்வுப்பூர்வமாக மதுவிலக்கை கொண்டு வாருங்கள். 3 தலைமுறைகளை குடிகாரர்களாக 2 திராவிட கட்சிகளும் மாற்றி இருக்கிறது. 2 நாளில் 500-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்ய முடிகிறது என்றால் இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள், இதற்குப் பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள். உங்களது கொள்கை முடிவை கூறுங்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் மது விற்பனை நடந்து வருகிறது. அதுபோல் அதிக சாலை விபத்துக்கள் ஏற்பட மதுதான் காரணம். இளம் விதவைகள் உருவாகவும், அதிக கல்லீரல் பாதிப்பு ஏற்படவும், தற்கொலை சம்பவங்கள் நிகழவும், மனநிலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உருவாகவும் மதுதான் காரணம்.
தி.மு.க. நிறுவனர் அண்ணாவின் கொள்கை பூரண மதுவிலக்கு. அதை எப்போது நிறைவேற்ற போகிறீர்கள், மது ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய சாவுகளை விட அரசு விற்கிற சாராயத்தினால் ஏற்படுகிற சாவுகள் ஆயிரம் மடங்கு அதிகம். இதனால் கோடிக்கணக்கான குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உடந்தையாக இருப்பதை முதலமைச்சர் தடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் மட்டுமின்றி அரசு விற்கிற சாராயமும் அகற்றப்பட வேண்டும். படிப்படியாக பூரண மதுவிலக்கை கொண்டுவர என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்பதை முதலஅமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.
மதுவை ஒழிப்பதற்காக 43 ஆண்டு காலம் டாக்டர் ராமதாஸ் குரல் கொடுத்து வருகிறார். மதுவை ஒழிக்க வேண்டும் என்று பா.ம.க.தான் பாடுபட்டு வருகிறது. தற்போது பெண்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள். மதுவை ஒழிக்க வேண்டும், முதலமைச்சரே இதை புரிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் வருகிற தேர்தலில் தி.மு.க. அரசுக்கு பேராபத்து ஏற்படும். செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்களை தொடர்ந்து செயல்படவிட்டால் உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய பாதகம் ஏற்படும். தமிழகத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை நடந்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் எத்தனை மணிக்கு சென்றாலும் சந்து கடைகள் திறந்து இருக்கிறது. அங்கு டாஸ்மாக் மதுபானம் கள்ளச்சந்தையில் விற்கிறார்கள். இது அரசுக்கும் தெரியும், இது பெரிய ஊழலாக நடந்து வருகிறது. அரசியல் காரணத்தினால் அமைதியாக பார்க்கிறார்கள். பெண்கள் கோபத்தில் இருக்கிறார்கள், அவர்களது மனநிலை மாறியிருக்கிறது.
இதை நான் முதலமைச்சருக்கு எச்சரிக்கையாக கூறுகிறேன். பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நாங்கள் ஏற்கனவே பெண்கள் மது ஒழிப்பு மாநாடு நடத்தி வருகிறோம். இனியும் தொடர்ந்து நடத்துவோம். வருமுன் தடுப்பதுதான் அரசின் கடமை. வந்த பிறகு பார்த்துவிட்டு செல்வது பெரிதல்ல. இது சராசரி அரசியல். இது எங்களுக்கு தேவையில்லை. 10 முதல் 15 வயது உடைய இந்த தலைமுறையினரை காப்பாற்றுவது அரசின் கடமை. மெத்தேல் ஆண்டி டோட் என்ற உயிர்காக்கும் மருந்து தமிழ்நாட்டிலும் இல்லை, ஜிப்மர் மருத்துவமனையிலும் இல்லை. அந்த மருந்து இருந்திருந்தால் ஓரளவு உயிரை காப்பாற்றி இருக்கலாம். மதுவிலக்கு துறையை எனது கண்காணிப்பில் விட்டுப்பாருங்கள். உங்கள் நிறுவனர் அண்ணாவின் லட்சியத்தை நான் நிறைவேற்றுவேன். அரசு மதுவை விற்கக்கூடாது, பூரண மதுவிலக்கை கொண்டு வரவில்லை எனில் மதுவுக்கு எதிராக பெரும் கோபத்தில் இருக்கும் பெண்களை திரட்டி விரைவில் மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என கூறினார்.