மாணவிகளுக்கு மாதம்தோறும் நிதியுதவி.. மூவலூர் ராமாமிர்தம் திட்டத்துக்கு ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு!
6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள், அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதி கல்லூரிகளில் தங்களது உயர்கல்வியை தொடர்பவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்
அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உயர்கல்வித் திட்டத்துக்கு, ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த ஒதுக்கீட்டை அடுத்து இனி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகள் வங்கி கணக்கில் மாதந்தோறும் 7ம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும்
முன்னதாக, தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளுக்குக்கான உயர்கல்விக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கவிருக்கிறது. இத்திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் முதல் நாளில் 15,000 விண்ணப்பங்கள் வந்துள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கனவே இருந்த தாலிக்கு தங்கம் எனும் திட்டத்தினை பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றினார்.
மாற்றியமைக்கப்பட்ட திட்டம்
2022ல் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெண் கல்வியை உறுதி செய்யும் விதமாக முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார். அதாவது அரசு பள்ளியில் பயிலும் மாண்விகள் உயர்கல்விக்காக மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்தார். இது தொடர்பாக உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது என சட்டசபையில் தெரிவித்தார்.
அதன் வாயிலாக அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்திற்கு தகுதியானவர்களை விண்ணப்பங்கள் வாயிலாக அடையாளம் காண முயற்சி செய்யப்பட்டது. அதாவது 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள், அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதி கல்லூரிகளில் தங்களது உயர்கல்வியை தொடர்பவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
3 லட்சம் மாணவிகள்
வரும் ஜீலை 15 தமிழ்நாட்டின் முன்னள் முதல்வர் காமராசர் பிறந்த நாளில் இந்த திட்டத்தின் வாயிலாக மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்ப்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக பெறப்பட்டன. முதல் நாளான இன்று (25/06/2022) மட்டும் 15000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலமாக சுமார் 3 லட்சம் முதல் 3.25 லட்சம் மாணவிகள் பயன்பெறுவர் என எதிர் பார்க்க்பபடுவதாக உயர்கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது