TN Govt. New Rules: என்னது, இரவு நேரத்தில் ஹாரன் அடிக்கக் கூடாது, பட்டாசும் வெடிக்கக் கூடாதா.? அரசு புதிய உத்தரவு...
தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தமிழக அரசு, அமைதி மண்டலங்களில், இரவு நேரங்களில் ஹாரன் அடித்தாலோ, பட்டாசு வெடித்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்தும் வகையில், ஒலி மண்டலங்களை பிரித்து, நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை பல்வேறு அரசு உயர் அதிகாரிகளுக்கு வழங்கி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும், விதிமுறைகளையும் வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, அந்தந்த மண்டலங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஒலி மாசு அதிகமாக இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
ஒலி மாசுவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நியமனம்
ஒலி மாசுவை கட்டுப்படுத்தும் வகையில், தொழில், வணிகம், குடியிருப்பு மற்றும் அமைதிப் பகுதி என நான்கு மண்டலங்களாக பிரித்து, அந்தந்த மண்டலங்களுக்கு ஏற்ப விதிமுறைகளை வகுக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பல்வேறு அதிகாரிகளையும் அதற்காக நியமித்துள்ளது. அதன்படி,
- அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்
- அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்
- காவல் ஆணையர்கள்
- அனைத்து மாநில காவல் துணை கண்காணிப்பாளர்கள்
- அனைத்து மாவட்ட சப் கலெக்டர்கள்
- அனைத்து மாவட்ட வருவாய் பிரிவு அதிகாரிகள்
இவர்கள், அந்தந்த மண்டலங்களில் ஒலி மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, புகார் வந்தால் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒலி மாசுவை கட்டுப்படுத்த முக்கிய விதிமுறைகள் என்னென்ன.?
- குறிப்பிட்ட மண்டலங்களில் ஒலி மாசுவை நிர்ணயிக்கப்பட்ட அளவில் வைத்திருப்பது அந்தந்த அதிகாரிகளின் பொறுப்பு
- அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல், எந்த பகுதியிலும் ஒலிபெருக்கி உள்ளிட்டவைகளை பயன்படுத்தக் கூடாது.
- அவசர காலங்கள் தவிர, இரவு நேரங்களில் பொதுவெளியில் ஒலிபெருக்கி, இசைக் கருவிகள் இசைப்பது, ஆம்ப்ளிஃபையர்களை பயன்படுத்துவது கூடாது.
- குடியிருப்பு மற்றும் அமைதி மண்டலமாக நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில், அவசர காலங்கள் தவிர, இரவு நேரங்களில் ஹாரன் அடிக்கக் கூடாது.
- அமைதி மண்டலங்களிலும், இரவு நேரங்களிலும் பட்டாசு வெடிக்கக் கூடாது.
- அமைதி மண்டலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், கட்டிடப் பணிகளில் ஒலி எழுப்பும் கருவிகளை பயன்படுத்தக் கூடாது.
இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து, மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

