மேகதாது கண்காணிப்பு குழுவை ரத்து செய்யக் கூடாது - தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் மனு
கடந்த மே மாதம் தேசிய பசுமை தீர்ப்பாய தென்மண்டல அமர்வு இந்த குழுவை அமைத்தது
மேகதாது அணை அமைக்கும் பணிகளை கர்நாடகா மேற்கொள்கிறதா என கண்காணிக்க அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
மேகதாது வல்லுனர் குழு:
காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி இதுவரை கிடைக்காத நிலையில், அணை கட்டுவதற்கு தேவையான கட்டுமானப் பொருட்களை கர்நாடகம் குவித்து வருவதாக கடந்த ஏப்ரல் 14&ஆம் தேதி பிரபல ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. அதனடிப்படையில் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்பாயத்தின் தென் மண்டல அமர்வு, மேகதாது பகுதியில் அணை கட்டுமானத்திற்கான ஏற்பாடுகள் நடக்கின்றனவா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 4 உறுப்பினர்களைக் கொண்ட வல்லுனர் குழுவை அமைத்தது.
அத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, மேகதாது அணை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்திலும், அணைக்கு அனுமதி கோருவதற்கான கர்நாடக அரசின் விண்ணப்பம் மத்திய அரசிடமும் நிலுவையில் இருப்பதால் இந்த விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் தலையிடத் தேவையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்து விட்டது. அதனால், மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டதா? என்பதை கண்டுபிடித்து சட்டப்பூர்வமாக பதிவு செய்வதற்கான முயற்சியும் தோல்வியடைந்தது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் கர்நாடகத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் கர்நாடக அரசு முன்னதாக அறிவித்தது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியிடம் முறையிட்டனர்.
இதற்கிடையே, கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு ஊடகங்களை சந்தித்த பசவராஜ் பொம்மை, "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும், அதற்கு அனுமதி பெறுவதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை ஓரிரு நாட்களில் சந்திக்க உள்ளேன்"என்று தெரிவித்தார்.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் அது தான் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மிகப்பெரிய அணையாக இருக்கும். தொடக்கத்தில் ரூ.5912 கோடி செலவில் 67.14 டி.எம்.சி கொள்ளளவில் மேகதாது அணையை கட்டுவதற்கு திட்டமிட்ட கர்நாடக அரசு, 2019-ஆம் ஆண்டில் அணைக்கான மதிப்பீட்டை ரூ.9,000 கோடியாக உயர்த்தியது. மேகதாது அணையின் கொள்ளளவும் 70 டி.எம்.சிக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டது. இது ஏற்கனவே கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ,கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவான 49.45 டி.எம்.சியை விட 42% அதிகம் ஆகும். இந்த அணையும் கட்டப்பட்டால் கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் அதிகாரப்பூர்வ கொள்ளளவு 184.57 டி.எம்.சியாக அதிகரிக்கும். நீர்நிலைகளை இணைத்து சட்டவிரோதமாக கர்நாடக அரசு சேமித்து வைத்துள்ள 40 டி.எம்.சி நீரையும் சேர்த்தால் மொத்தக் கொள்ளளவு 225 டி.எம்.சியாக அதிகரித்து விடும். அதன்பின் தமிழகத்திற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட கிடைக்காத சூழ்நிலை உருவாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்தார்.
மேலும், வாசிக்க:
மேகதாது அணை விவகாரத்தை கண்காணிக்க தனி குழு- ராமதாஸ்
மேகதாது அணைக்கு ‛நோ சான்ஸ்’ ; மத்திய அரசு உறுதியளித்ததாக துரைமுருகன் பேட்டி!