Loan Collection New Rules: வலுக்கட்டாயமா கடனை வசூலிச்சா 5 ஆண்டுகள் சிறை.. புதிய சட்டம் பத்தி தெரியுமா.?
நாட்டில், கடன் வாங்கிவிட்டு கந்து வட்டி, கட்டாய வசூல் போன்ற கொடுமைகளில் சிக்கித் தவித்துவரும் ஏராளமானோருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, புதிய சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடன் பெற்றவர்களிடம் கடனை வலுக்கட்டாயமாக வசூல் செய்வதை தடை செய்வதற்கான, கட்டாய கடன் வசூல் தடுப்பு சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அனைத்து கட்சிகளாலும் வரவேற்கப்பட்டுள்ளது. அந்த சட்டம் குறித்து பார்க்கலாம்.
கட்டாய கடன் வசூல் தடுப்பு சட்டம் என்ன சொல்கிறது.?
கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா கடந்த 26-ம் தேதி, சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதா இன்று விவாதத்திற்கு விடப்பட்டு, அதைத் தொடர்ந்து, மசோதா நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக விவாதத்தின்போது பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து வரப்பெற்ற ஆலோசனையின் அடிப்படையிர், இந்த சட்ட முன்வடிவின் பிரிவு 2-ல் வரப்பெறும் வங்கிகள் என்ற வார்த்தை நீக்கப்படும் என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து திருத்தங்களுடன் மசோதா நிறைவேறியது.
இந்த கட்டாய கடன் வசூல் தடுப்பு சட்டத்தின்படி,
- வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும்போது, கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால், கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்.
- வலுக்கட்டாயமாக கடன் வசூலிக்கும்போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொண்டால், பிணையில் வெளிவர முடியாத சிறைத் தண்டனை.
- 20-ம் பிரிவில் கூறப்பட்டுள்ள மிரட்டுதல், பின் தொடருதல் போன்ற குற்றங்களை செய்தால், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும்.
- கடன் வசூல் செய்யும் நிறுவனங்கள் வெளி ஆட்களை பயன்படுத்தினாலோ, கடன் பெற்றவர்களையோ, அவர்களது குடும்பத்தினரின் பொருட்களை பறிமுதல் செய்தல், ஆவணங்களை எடுத்தாலோ, அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை அல்ல ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.
- கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை, அதாவது அவரது பெற்றோர், கணவர் (அ) மனைவி, குழந்தைகள் ஆகியோரை, கடன் வழங்கிய நிறுவனமோ, அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக் கூடாது.
- ஏற்கனவே நிதிச் சுமையில் இருக்கும் கடனாளிகளிடம் இருந்து கடன்களை வசூலிக்க சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
- இந்த மசோதாவின்படி, கடன் பெறுவோருக்கும், கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறைதீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம்.
இந்த மசோதா, வங்கி அல்லாது, கடன் வழங்கும் நிறுவனங்கள், செயலிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக, சிறிய அளவிலான தொகை உடனே வங்கிக் கணக்கில் செலுத்தப்படு எனக் கூறி கடன்களை வழங்கும் செயலிகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வட்டி செலுத்த ஒருநாள் தாமதமானால் கூட, அவர்களை மிரட்டுவது, வசைபாடுவது, ஆபாசமாக சித்தரிப்பது என, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நிச்சயம் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு நிவாரணமாக அமையும்.





















