TN Sports City: அட்ரா சக்க.. சென்னை அருகே விளையாட்டு நகரம்; ரூ.301 கோடி ஒதுக்கிய அரசு; என்னென்ன இருக்கும்.?
சென்னைக்கு அருகே செம்மஞ்சேரியில், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்க 301 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அங்கு என்னென்ன வசதிகள் இருக்கும்.?

தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில், சென்னை அருகே உள்ள செம்மஞ்சேரியில், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்க 301 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தென்னிந்தியாவில் முதல் முறையாக உருவாகும் மிகப்பெரிய விளையாட்டு நகரமாகும்.
112.12 ஏக்கரில், ரூ.301 கோடியில் அமைக்கப்படும் விளையாட்டு நகரம்
சென்னை அருகே உள்ள செம்மஞ்சேரியில் 112.12 ஏக்கர் பரப்பளவில், 301 கோடி ரூபாய் செலவில் இந்த சர்வதேச விளையாட்டு நகரம் உருவாக உள்ளது. இதற்காக நிலம் அடையாளம் காணப்பட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கு 301 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு நகரம் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரச, முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இது பழைய மகாபலிபுரம் சாலை (OMR) அருகே அமைவதால், சென்னை மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய இடமாக இருக்கும். இந்த திட்டம் மூன்று மாதங்களில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விளையாட்டு நகரத்திற்கு மெட்ரோ ரயில் இணைப்பும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத்தரத்தில் விளையாட்டு வசதிகள்
இந்த விளையாட்டு நகரத்தில், கால்பந்து மைதானம், வில்வித்தை மைதானம், துப்பாக்கி சுடுதல் மையம், ரோலர் ஸ்கேட்டிங், தடகளம், நவீன செயற்கை இழை ஓடுதளம், நீச்சல் மற்றும் BMX போன்ற சர்வதேச விளையாட்டு வசதிகள், பல்வேறு உள்அரங்க விளையாட்டுகளை நடத்தும் வகையிலான பல்நோக்கு விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவைகள் அமைக்கப்படுகின்றன.
அதில் முதல் கட்டமாக, நீர் விளையாட்டுகள், துப்பாக்கி சுடுதல், ஸ்கேட்டிங், வில்வித்தை மற்றும் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீரர்கள் தங்கும் விடுதிகள், உள் விளையாட்டு அரங்கம், புல்வெளிகள், சாலைகள், மழைநீர் வடிகால் ஆகியவை அனைத்தும் உலகத் தரத்தில் இருக்கும். அதோடு, 13 மீட்டர் அகலமும் 1 கிலோ மீட்டர் நீளமும் கொண்ட படகு சவாரி வசதி(Boating Track) அங்கு இடம்பெறுகிறது. இது இந்தியாவில் ஒரு விளையாட்டு வளாகத்தில் முதன்முறையாக உருவாகும் நீர்விளையாட்டு அமைப்பு என்பதால் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
இது மட்டுமின்றி, வெள்ள நீரை பக்கிங்காம் கால்வாய் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு அனுப்பும் வகையில் 4.1 கிலோமீட்டர் நீள மண் வடிகால் மற்றும் கான்க்ரீட் கால்வாய்கள் அமைக்கப்படுகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(SDAT) மற்றும் நீர்வளத்துறை(WRD) இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.




















