CM MK Stalin: அன்பின் திருவுரு.. தன்னலம் கருதா சேவை.. அன்னையர் தினத்துக்கும், செவிலியர்களுக்கும் முதல்வர் வாழ்த்து
அன்னையர் தின வாழ்த்துக்களையும், செவிலியர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார் முத்ல்வர் ஸ்டாலின்
ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் தேதி சர்வதேச செவிலியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. செவிலியர்கள் மற்றும் அவர்களின் சேவைகளை கொண்டாடவும், கவுரவிக்கும் வகையில், இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒரு மருத்துவமனையில் மருத்துவர்களின் சேவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவு முக்கியத்துவம் கொண்டது தான் செவிலியர்களின் சேவையும்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைவரையும் சரிசமமாக பார்த்து, தன் சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்தி பணியாற்றும் செவிலியர்களின் பங்கு அளப்பறியாதது.
இங்கிலாந்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து, பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக தன்னை செவிலியர் பணியில் ஈடுபடுத்தி கொண்டவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சி பள்ளியையும் தொடங்கியவர். இவரை நினைவுகூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அன்பின் உருவமாக விளங்கி, தன்னலங்கருதாத சேவையால் மருத்துவத்துறையின் தூண்களாகத் திகழும் செவிலியர்கள் அனைவருக்கும் #InternationalNursesDay வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) May 12, 2024
உலகத்தாரின் உடல்நோயையும் உள்ளநோயையும் தீர்க்கும் உங்களின் நலனை நமது அரசு என்றும் கண்ணும் கருத்துமாகப் போற்றும்! pic.twitter.com/1w0Ibw89Gv
சர்வதேச செவிலியர் தினத்தை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், “அன்பின் உருவமாக விளங்கி, தன்னலங்கருதாத சேவையால் மருத்துவத்துறையின் தூண்களாகத் திகழும் செவிலியர்கள் அனைவருக்கும் #InternationalNursesDay வாழ்த்துகள்! உலகத்தாரின் உடல்நோயையும் உள்ளநோயையும் தீர்க்கும் உங்களின் நலனை நமது அரசு என்றும் கண்ணும் கருத்துமாகப் போற்றும்!” என குறிப்பிட்டுள்ளார்.
மே 12 ஆம் தேதி செவிலியர்கள் தினம் கொண்டாடப்படுவது போலவே அன்னையர் தினமும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டில் மே 12 அன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. நம்மை பெற்றெடுத்த தாய் மட்டுமின்றி நம்மை பிள்ளைகளாக கருதும் மற்ற பெண்களுக்கும், அவர்களின் கடின உழைப்பு மற்றும் தங்கள் குடும்பத்திற்காகவும் சமூகத்திற்காகவும் அவர்கள் செய்த தியாகங்கள் ஆகியவற்றை கொண்டாடுவதன் மூலம் நமது அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் நாள் இது.
அன்னையர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “ உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா! தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள்! ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்!” என குறிப்பிடப்பட்டுள்ளது.