TN Budget 2021: தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல - பட்ஜெட் உரையில் அறிவித்த நிதியமைச்சர்
தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல என்றும், அந்த கூற்று தவறானது என்றும் நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. அரசு ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில், தி.மு.க. அரசு 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால், இந்த நிதிநிலை அறிக்கை மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்பது தவறானது என்றார். நிதியமைச்சர் பேசும்போது, ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது. தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்றே தவறானது என்று கூறினார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 3 கோடி மீண்டும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியின்போது தமிழகம் கடுமையான மின் தட்டுப்பாட்டை சந்தித்தது. சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மின் கட்டுமான நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடும், மின்தடையும் முடிவுக்கு வந்தது.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசும் தமிழ்நாட்டை மின்மிகை மாநிலம் என்றும், அ.தி.மு.க. அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்கிறது என்றும் அடிக்கடி கூறி வந்தனர். மேலும், சட்டசபையிலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணியும் தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசியுள்ள நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல என்று கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் மின்தடை ஏற்பட்டு வந்தது. 10 ஆண்டுகளாக மின்மாற்றிகளும், மின்சார வயர்களும் பராமரிக்கப்படாததால் அதற்கான பராமரிப்பு பணிகளை புதிய அரசு மேற்கொண்டு வருவதால் மின்சார தடை ஏற்படுவதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் தகவல்களை உடனுக்குடன் அறிய TN Budget 2021 : நிதிநிலை சிக்கலை சரிசெய்ய 3 ஆண்டுகள் ஆகும் - நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்