Petrol Price Reduction: பெட்ரோல்: வரி குறைப்பதால் விலை குறையுமா?
அமைச்சரின் இந்த அறிவிப்பு பெட்ரோல் விலையைக் குறைக்குமா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழநிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக பெட்ரோலுக்கான மாநில வரியில் மூன்று ரூபாய் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 102.49-க்கு விற்கப்படும் நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு பெட்ரோல் விலையைக் குறைக்குமா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஹைதர் அலியிடம் கேட்டோம், ‘தமிழ்நாடு அரசின் பெட்ரோலுக்கான வாட் வரியில் மூன்று ரூபாய் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்க வேண்டிய அம்சம்.ஆனால் இதில் எத்தனை சதவிகிதம் குறைக்கப்படுகிறது என்கிற விவரம் தெரியவில்லை. வரியில் இத்தனை சதவிகிதம் என அரசு முடிவு செய்திருக்கும் அந்த விவரம் தெரிந்தால்தான் இதில் மேலதிகமாக எதுவும் சொல்ல முடியும். ஆனால் வரியில் மூன்று ரூபாய் குறைக்கப்படுகிறது என்றால் அதே அளவுக்கு நுகர்வோருக்கான பெட்ரோல் விலையிலும் குறையும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியென்றால் மூன்று ரூபாய் வரை பெட்ரோல் விலை குறையுமா என்கிற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
முன்னதாக, பட்ஜெட் தாக்கலின்போது நடந்த முக்கிய அம்சங்களாக
சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் ஆனது தற்போது தாக்கல் செய்யப்பட்டது.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய எழுந்தபோது அதிமுகர் உறுப்பினர்கள் பேச வாய்ப்பளிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு - என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசத் தொடங்கினார்.
'இந்த திருத்திய வரவு செயலவு அறிக்கை இந்த நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு பொருந்தும்.
பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் கடன் சுமையை சரி செய்து நிதிநிலையை மேம்படுத்துவது நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று; தேர்தல் வக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றப்படும்.
பல்வேறு தேசிய அளவிலான நிகழ்வுகளால் தமிழகத்தின் நிதிமேலாண்மை பாதிக்கப்பட்டு இருப்பதை வெள்ளை அறிக்கை நிரூபித்தது; தற்போது அமைக்கப்பட்டுள்ள 15ஆவது நிதிக்கு, சரக்கு மற்றும் சேவை வரி, ஒன்றிய அரசின் அதிகரித்து வரும் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் பயன்பாடு ஆகியவை மாநிலங்களுக்கு உரிய நிதியை திசை திருப்பி விடுகின்றன
கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு வழிகளில் மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுவதை வெள்ளை அறிக்கை காட்டி இருக்கிறது
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு கடுமையாக சரிந்துள்ளது, நுகர்வோர்களுக்கு நியாமான பங்கை வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது.
அரசு துறைகளிலும், நிறுவனங்களிலும் இந்த நிதியை கண்டறிவதற்கான ஆய்வில் கணிசமான நிதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; மேற்கூரிய கணக்குகளை முழுமையாக சரி செய்யவும், பயன்படுத்த முடியாத மற்றும் பயன்படுத்தக்கூடிய நிதியை கண்டறிய நிதித்துறை மூத்த அதிகாரியின் கீழ் சிறப்பு குழு அமைக்கப்படும்; அனைத்து அரசின் நிதியும் கருவூல அமைப்பின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும்.' என நிதியமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.