Bangaru Adigalar: பங்காரு அடிகளார் மறைவு.. அண்ணாமலை நடைபயணம் ஒத்திவைப்பு.. கட்சி நிகழ்ச்சிகள் ரத்து..
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவையொட்டி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவையொட்டி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேல்மருவத்தூர் அதிபராசக்தி கோயிலின் சித்தர் பீடத்தின் தலைமை ஆன்மீக குருவான பங்காரு அடிகளார் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே நேற்று (அக்டோபர் 19) மாலை அவருக்கு திடீர் மாரடைப்பால் ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும், எதுவும் பலனளிக்காமல் மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் காலமானார். அவரது மறைவு செய்தி ஆதிபராசக்தி கோயில் பக்தர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆன்மீகத்தை அடித்தட்டு மக்களுக்கு அன்னையின் பரிவுடன் வழங்கி, பெண்களுக்கு அன்னையின் கருவறைக்குள்ளே சென்று ஆராதனைகள் செய்யக்கூடிய அருளாசி வழங்கி, நாடெங்கும் சக்தி பீடங்கள், வழிபாட்டு மன்றங்கள் அமைத்து, ஏற்றத்தாழ்வுகள் இல்லாது, சமூகத்தின் எல்லா நிலை மக்களுக்கும் ஆன்மீகத்தின் அமைதியையும் ஆறுதலையும் வழங்கி அன்னையின் அவதாரமாக திகழ்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளார் நம்மிடையே வாழும் தெய்வத்தின் வடிவாக வாழ்ந்தவர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள்.
கோடிக்கணக்கான மக்களின் குருவாகவும், ஆன்மீக மற்றும் கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும். ஏழை, எளிய மக்களின் வழிகாட்டியாகவும் விளங்கிய பங்காரு அடிகளார் அவர்களது மறைவு, நமது சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரின் ஆன்மீக அன்பர்களுக்கும் பக்தர்களுக்கும் பாஜக சார்பாக ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் பூவுலக நிறைவுச் செய்தியை தொடர்ந்து, அம்மாவின் அவதார வடிவாகத் திகழ்ந்து இறைவன் திருவடி நிழலில் அடைக்கலமாகி இருக்கும் அடிகளாரின் பிரிவு துயர் ஆற்ற இரண்டு நாட்களுக்கு நமது கட்சி நிகழ்ச்சிகள், அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
நாளைய நடைபயணத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துவிட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் காத்திருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், பாஜக சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், தவிர்க்கவியலாத காரணத்தினால், நடைபயணத்தில் ஏற்பட்டுள்ள இந்த தேதி மாற்றத்தைப் பொறுத்தருள வேண்டிக் கொள்கிறேன். திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான நடைபயண தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.