MK Stalin Assembly Speech: ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி - உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று அறிவித்தார்.
இதுகுறித்து, சட்டப்பேரவையில் முதல்வர் இன்று உரையாற்றுகையில்,
பேரவைத் தலைவர் அவர்களே, எதிர்க்கட்சியைச் சார்ந்த உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆன்லைன் சூதாட்டத்தைப் பற்றி இங்கே எடுத்துச் சொன்னார்கள். இதுகுறித்து தொடர்ந்து பத்திரிகைகளிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆன்லைன் குதாட்டத்தைப் பொறுத்தவரையில், சென்ற ஆட்சியிலே தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 3-8-2001 அன்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலே, 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறிவிட்டது. ஆனாலும், அந்தத் தீர்ப்பின்மீது சட்ட ஆலோசனை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தினுடைய தீர்ப்பினைத் தடை செய்யக் கோரி, இந்த அரசு உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்திருக்கிறது. வழக்கைப் பொறுத்தவரைக்கும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்திலே நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற உறுப்பினர் அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
ஆன்லைன் சூதாட்டம்:
ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்து நிறைவேற்றப்பட்டிருந்த சட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் ஆகஸ்ட் 20ம் தேதி விழுப்புரம் மாவட்டம் சேந்தனூரைச் சேர்ந்த ஓர் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். அதனால் ஏற்பட்ட சோகம் மறையும் முன்பே தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்தடுத்து மேலும் 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர். சில தினங்களுக்கு முன்பு, ஆனலைன் சூதாட்டம் காரணமாக, சென்னை பெருங்குடியைச் சேர்ந்த பன்னாட்டு வங்கி அதிகாரி மணிகண்டன் என்பவர் அவரது மனைவி மற்றும் இரு மகன்களை கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
அதேநேரத்தில், உரிய விதிகளுடன் புதியசட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் நீதிபதிகள் தீர்பளித்தனர். எனவே, உச்சநீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்காமல், உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் முன்னதாக கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்