துக்ளக் குருமூர்த்திக்கு நெருங்கும் பிடி? : அதிமுக ஆட்சியில் பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற்றார் தலைமை வழக்கறிஞர்
நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்போர் என குறிப்பிடுவதற்கு பதிலாக நீதிபதிகள் என தவறாக கூறிவிட்டதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அடுத்தநாளே வருத்தம் தெரிவித்திருந்தார்.
நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது குற்றவியல் ரீதியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முகாந்திரம் இல்லை என அப்போதைய தலைமை வழக்கறிஞர் பிறப்பித்த உத்தரவை தற்போதைய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் திரும்பப்பெற்றுள்ளார்.
சென்னையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி நடந்த துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, ஊழல்வாதிகளுக்கு தாமதமாக தண்டனை கிடைப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும் தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருப்பவர்கள் அனைவரும் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள் என்றும், யாருடைய கால்களைப் பிடித்தாவதுதான் அந்த வாய்ப்பைப் பெற்றார்கள் எனவும் பேசியிருந்தார். இதையடுத்து நீதிபதிகள் நியமனம் குறித்து குருமூர்த்தி பேசியது சர்ச்சையை எழுப்பியது. இந்நிலையில் நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்போர் என குறிப்பிடுவதற்கு பதிலாக நீதிபதிகள் என தவறாக கூறிவிட்டதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அடுத்தநாளே வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நீதிபதிகள் நியமனம் குறித்தும், நேர்மை குறித்தும், தீர்ப்புகள் குறித்தும் விமர்சிப்பதா என அவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி, குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அவரது மனுவில், துக்ளக் ஆண்டு விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி, நீதிபதிகள் நியமனம், அதுகுறித்த விமர்சனம் பற்றிப் பேசியது நீதித்துறையை அவமதிக்கும் செயல். இதுகுறித்து நீதிமன்றம் குருமூர்த்தி மீது தாமாக முன்வந்து 15(1) என்ற பிரிவின் கீழ் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் குருமூர்த்திக்கு எதிராக குற்றவியல் ரீதியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, அரசுதலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவைப் பரிசீலித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் இதில் விசாரணைக்கு ஆஜராகும்படி ஆடிட்டர் குருமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து இந்த மனுதொடர்பாக எஸ்.குருமூர்த்தி விரிவான பதில்மனு தாக்கல் செய்திருந்தார்.
இதில் நீதிபதிகள் நியமனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முகாந்திரம் இல்லை என்பதால் அனுமதி வழங்க முடியாது என அப்போதைய அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் தற்போதைய தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், குருமூர்த்தி மீது குற்றவியல் ரீதியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முகாந்திரம் இல்லை என முன்னதாக விஜய் நாராயண் பிறப்பித்த உத்தரவை தற்போது திரும்பப்பெற்றுள்ளார். வரும் நவம்பர் 12ஆம் தேதி இந்த பிரச்சினையை மறுபரிசீலனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.