திருவண்ணாமலை அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு
போளூர் அருகே 5ஆம் வகுப்பு மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை: அரசு பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவி டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செம்மியமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் புகழேந்தி வயது 35. இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு பிரியதர்ஷினி என்ற பெண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் தாய் கீதா உயிரிழந்துள்ளார். பின்னர் தந்தை புகழேந்தி பிரியதர்ஷினியை வளர்த்து வந்துள்ளார். பிரியதர்ஷினி அருகிலுள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாணவி பிரியதர்ஷினிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். அவருக்கு உள்ளூரில் உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சை பார்த்து வந்துள்ளனர். மேலும் பிரியதர்ஷினிக்கு நாளடைவில் உடல்நிலை மோசமான நிலையில் இருந்துள்ளார். உடனடியாக மாணவி பிரியதர்ஷினியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பிரியதர்ஷினியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து மாணவி பிரியதர்ஷினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திடீரென காலையில் சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி உயிரிழந்துள்ளார். மாணவியின் உடலை தற்போது அவருடைய சொந்த ஊரில் வைக்கப்பட்டுள்ளது. 5ஆம் வகுப்பு பள்ளி மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.