IND vs ENG: கோலிக்கு பதில் களமிறங்கப்போவது யார்? ப்ளேயிங் லெவனில் சுதர்சனா? கருண் நாயரா?
IND vs ENG: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான போட்டியில் இந்திய அணியில் கோலிக்கு பதில் களமிறங்கப்போவது யார்? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடர் ஆடி வருகின்றனர். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
சவால் மிகுந்த இங்கிலாந்து தொடர்:
இந்திய அணிக்கு எப்போதும் சவால் மிகுந்த தொடர்களில் ஒன்றாகவே இங்கிலாந்து தொடர் இருந்து வருகிறது. குறிப்பாக, டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரை இங்கிலாந்து மண் இந்திய அணிக்கும், இந்திய வீரர்களுக்கும் கடினமானதாக இருக்கும். இதுபோன்ற சீதோஷ்ண நிலையில் இந்திய அணியைத் தாங்கிப் பிடிக்கும் சீனியர் வீரரான விராட் கோலி இல்லாமல் இந்திய அணி இந்த முறை இங்கிலாந்திற்கு பயணிக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த விராட் கோலியின் அறிவிப்பால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு பிறகு அவரது இடத்தை நிரப்பி வந்தார் விராட் கோலி. இப்போது, விராட் கோலியின் இடத்தை யார் நிரப்ப போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோலிக்கு பதில் யார்? கேப்டன் யார்?
இந்திய அணியின் கேப்டன் யார்? கோலிக்கு பதிலாக மிடில் ஆர்டரில் களமிறங்கப்போவது யார்? போன்ற பல கேள்விகளுக்கு மத்தியில் நாளை இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பும்ராவிற்கு பதிலாக சுப்மன்கில் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்றும், அவரே விராட் கோலியின் 4வது இடத்தில் களமிறங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுதர்சனா? கருண் நாயரா?
இதனால், அணியில் தொடக்க வீரராக சாய் சுதர்சன் அல்லது கருண் நாயர் களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், டாப் ஆர்டரில் முக்கிய வீரராக கே.எல்.ராகுல் களமிறங்குவார் என்று கருதப்படுகிறது. சாய் சுதர்சன் இதுவரை இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடியிருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லை.
அதேசமயம், கருண் நாயருக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் உண்டு. அவர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக முச்சதம் அடித்த அனுபவம் கொண்டவர். அவருக்கு தொடர்ந்து இந்திய அணியில் ஆட வாய்ப்புகள் மறுக்கப்பட்டுவிட்டது. 33 வயதான கருண் நாயருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தால் தன்னை நிரூபிப்பார் என்று கருதப்படுகிறது.
பவுலிங் எப்படி?
இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், ஜடேஜா, ஆகியோர் இடம்பெறுவது உறுதி. அதேசமயம் கூடுதல் பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி செல்லும் என்றே கருதப்படுகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி, ரஹானே, புஜாரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் ஜெய்ஸ்வால், சுப்மன்கில், கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட் ஆகியோர் இருந்தாலும் களத்தில் நங்கூரமாக நிற்க ரஹானே, புஜாரா போன்ற வீரர்களை இந்திய அணி நிர்வாகம் ரஞ்சியில் இருந்து தேர்வு செய்யுமா? என்று நாளையே தெரிய வரும்.
இந்திய அணியின் டெஸ்ட் மிடில் ஆர்டர் தற்போது ஆட்டம் கண்டுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கருத்தில் கொண்டு இந்திய அணி எதிர்கால மற்றும் தொலைநோக்கு பார்வையில் இந்திய அணியைத் தேர்வு செய்யும் என்றே கருதப்படுகிறது.



















