Trump Vs Apple: சாரே, நீங்க பண்றதெல்லாம் நியாயமா.? ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப் - இந்தியாவுக்கும் இழப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதில் இந்தியாவிற்கு இழப்பு உள்ளது. விஷயம் என்ன தெரியுமா.?

ஆப்பிள் நிறுவனம், ஐஃபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால், 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்தியாவிற்கும் ஒரு இழப்பு உள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
ஐஃபோன் உற்பத்தியில் ஏற்கனவே கலக்கும் இந்தியா
செல்ஃபோன் என்றாலே முதன்மையாக இருப்பது ஐ ஃபோன் தான். தரத்திலும் சரி, விலையிலும் சரி, டாப் அது தான். ஒரு முறை ஐ ஃபோனை பயன்படுத்தும் வாடிக்கையாளர், அதன் பிறகு வேறு ஃபேன்களுக்கு மாறுவதில்லை. இந்த அளவிற்கு மக்களை கவர்ந்துள்ள ஐ ஃபோனை தயாரித்துவரும் ஆப்பிள் நிறுவனம், தனது பெரும்பாலான உற்பத்திக்கு சீனாவையே நம்பியுள்ளது.
இப்படி, ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் ஆதரவை இந்தியா வழங்கி வரும் நிலையில், அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியையும் இந்தியாவிற்கு கொண்டுவர, ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் முற்றியபோது, உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றுமாறு ஆப்பிள் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்பட்டது. அதனால், இந்தியாவிலேயே மொத்த ஐ ஃபோன் உற்பத்தியையும் மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.
ஐஃபோன் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்ற ட்ரம்ப் திடீர் எதிர்ப்பு
இந்நிலையில், ஏற்கனவே கூறியதற்கு நேர்மாறாக, ஆப்பிள் நிறுவனத்தை இந்தியாவில் தொடங்காதீர்கள் என, ஆப்பிள் சிஇஓ டிம் குக்கிடம், ட்ரம்ப் தெரிவித்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இது குறித்து தெரிவித்திருந்த ட்ரம்ப், “டிம் குக்குடன் ஒரு சின்ன பிரச்னை ஏற்பட்டதாகவும், அவரிடம், நீங்கள் என நண்பர், நான் உங்களை மிகவும் நன்றாகவே நடத்துகறேன், ஆனால் நீங்கள் பல பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்கிறீர்கள். இந்தியா முழுவதும் கட்டிடங்கள் கட்டுவதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் கட்டிடம் கட்டுவதை நான் விரும்பவில்லை“ என்று தெரிவித்ததாக கூறினார்.
மேலும், “இந்தியாவை கவனித்துக்கொள்ள விரும்பினால், நீங்க இந்தியாவில் கட்டிடம் கட்டலாம். ஆனால் நீங்கள் அமெரிக்க நிறுவனம். இந்தியாவில் கட்டிடம் கட்டக் கூடாது. ஏனென்றால், இந்தியா உலகத்திலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று. அதனால், இந்தியாவில் உங்கள் பொருட்களை விற்பது மிகவும் கடினம்“ எனவும் டிம் குக்கிடம் கூறியதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அதோடு, நீங்கள் பல வருடங்களாக சீனாவில் கட்டிய எல்லா தொழிற்சாலைகளையும் நாங்கள் பொறுத்துக்கொண்டுள்ளோம். ஆனால் தற்போது இந்தியாவல் கட்டுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளட்டும். நீங்கள் அமெரிக்காவை பாருங்கள் என்று டிம் குக்கை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததாக தகவல் வெளியானது.
ஆப்பிளுக்கு வரி போடுவதாக மிரட்டியுள்ள ட்ரம்ப்
இந்நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனத்திற்கு ட்ரம்ப் மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அமெரிக்காவில் அல்லாமல், வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டு அங்கு விற்கப்படும் ஐஃபோன்களுக்கு, 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதுதான் அந்த எச்சரிக்கை. ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 2.5% சரிந்தன.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்காவில் விற்கப்படும் ஐஃபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், இந்தியா அல்லது வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது என்றும், ஆப்பிளின் டிம் குக்கிடம் வெகு நாட்களுக்கு முன்பே தெரிவித்ததாக கூறியுள்ளார்.
அப்படி இல்லையென்றால், ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு 25% வரியை கட்ட வேண்டும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு இழப்பு
வரும் ஜூன் மாத முதல் பாதியிலிருந்து, அமெரிக்காவில் விற்கப்படும் ஐஃபோன்கள் இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என ஆப்பிள் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது ட்ரம்ப் நெருக்கடி கொடுத்து வருவதால், இந்தியாவிற்கும் சிக்கல் ஏற்படும்.
வரிக்கு பயந்து, இந்தியாவில் தொடங்க இருக்கும் கட்டுமானங்களை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தினால், இந்தியாவிற்கு அது நிச்சயம் மிகப் பெரிய இழப்புதான். ஏராளமான வேலை வாய்ப்புகளும் பறிபோகும். அதனால், நீங்கள் செய்வது நியாயமா என அமெரிக்க அதிபர் ட்ரம்பை கேட்கத் தோன்றுகிறது. இந்த நிலை மாறுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.





















