CM Stalin: அதிரவிட்ட பல்லடம் கொலை: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கைதாகி உள்ள நிலையில், ஏனையோரை கைது செய்ய காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
CM Stalin: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.2 லட்சம் நிதியுதவி:
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், மாதப்பூர் கிராமம், மஜரா கள்ளக்கிணர் அருகில் குரைதோட்டம் என்ற இடத்தில் நேற்று (3-9-2023) இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மது அருந்திவிட்டு புஷ்பவதி, க/பெ.பழனிசாமி (வயது 69), ரத்தினாம்பாள். க/பெ. சுப்பிரமணியம் (வயது 58), செந்தில்குமார், த/பெ.சண்முகம் (வயது 48) மற்றும் மோகன்ராஜ், த/பெ.பழனிசாமி (வயது 45) ஆகியோரை அரிவாளால் வெட்டியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சியான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஏனைய குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய உத்திரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்திரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
என்ன நடந்தது?
திருப்பூர் பல்லடம் அருகே 4 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்துவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு கிராமத்தில் உள்ள குறைகிணறு பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் குறைகிணறு பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்களான மோகன்ராஜ், புஷ்பாவதி, ரத்தினாம்பாள் ஆகியோர் ஆவர்.
செந்தில்குமாரிடம் ஓட்டுநராக பணியாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தனது நண்பர்களுடன் நேற்று இரவு குறைதோட்டம் பகுதியில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தட்டிக்கேட்ட செந்தில்குமாரை அவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மோகன்ராஜ், புஷ்பாவதி, ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் 4 பேரும் ரத்த வெள்ளத்தில் மரணம் அடைந்தனர்.
கொலை நிகழ்ந்த இடத்தில் பல்லடம் டி.எஸ்.பி. செளமியா விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், செந்தில்குமாரிடம் வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேசன், மோகன்ராஜிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசனை வேலையை விட்டு செந்தில்குமார் நிறுத்திய அதேநேரம், மோகன்ராஜும் பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், நண்பர்களுடன் அங்கு சென்று திட்டமிட்டு செந்தில்குமாரையும் மோகன்ராஜையைும் தடுக்க வந்த 2 பெண்களையும் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.