'எங்களை தேட வேண்டாம் தீபாவளிக்கு வந்து விடுவோம்' - கடிதம் எழுதிவிட்டு 3 மாணவிகள் மாயம்
சென்னைக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது சகோதரி மற்றும் தோழியுடன் மொத்தம் 3 பேர் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சாமளாபுரத்தில் வசித்து வருபவர் ராமசாமி. இவருக்கு 15 வயதில் தரணி தேவி மற்றும் 13 வயதில் மோகனப்பிரியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு 15 வயதில் கௌசல்யா என்ற மகளும் உள்ளார்.
மேலும், தரணிதேவி மற்றும் கௌசல்யா ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த நிலையில் நடந்து முடிந்த தேர்வில் தேர்ச்சி பெறாதால் மறுதேர்வுக்காக படித்து எழுதியுள்ளனர்.
அதேபோல் தரணி தேவியின் தங்கை மோகனப்பிரியா அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பெற்றோர்கள் மதிய உணவிற்காக வீட்டுக்கு வந்தபோது மூன்று பேரும் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எங்களை தேட வேண்டாம் தீபாவளிக்கு வந்து விடுவோம் - மாணவிகள் கடிதம்
இதனை தொடர்ந்து பெற்றோர்கள் மிக பதட்டமான சூழ்நிலையில் அருகில் உள்ள வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகள், மாணவிகளின் தோழி வீடுகள் என அனைத்து இடங்களிலும் தேடினர். ஆனால் எங்கேயும் மாணவிகள் செல்லவில்லை என தெரியவந்தது.
இந்த நிலையில் மாணவிகள் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று பெற்றோருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் எழுதியிருந்தது.. நான் தங்கை, என் பிரண்ட் மூவரும் சென்னைக்கு போகிறோம். எங்களை தேட வேண்டாம் என அதில் எழுதி இருந்ததை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதேபோல் மற்றொரு மாணவி வீட்டில் எழுதி வைத்த கடிதத்தில் எழுதி இருந்தது . எல்லோரும் மன்னிக்கவும், நான் சென்னைக்கு வேலைக்கு போறேன். உங்ககிட்ட சொன்னா விடமாட்டீங்க. பிரண்ட் கூட வர்ராங்க. துணிக்கடையில் வேலை. ரூ.3,500 சம்பளம்.
என்னை தேடி அலைய வேண்டாம். நானே வந்திருவேன், என்னோட சகோதரியை கூட்டீட்டு போறேன், இனிமேல் ஸ்கூல் போகமாட்டாள், எங்கூட வந்தா அவளும் வேலை கத்துக்குவா. தீபாவளிக்கு வந்துருவேன் அப்படியே பால்டெக்னிக் படிக்கிறேன் அதுவரைக்கும் யாரும் தேட வேண்டாம், எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியிருந்தது.
இதையடுத்து மங்கலம் போலீசில் மாணவிகளின் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சென்னைக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது சகோதரி மற்றும் தோழியுடன் மொத்தம் 3 பேர் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.